அவரும் நானும்

பகல், வெயிலின் தகிப்புக்கு ஈடுகொடுத்து நகர்ந்து கொண்டிருந்தது. அந்த வீட்டு வாசலிருக்கும், பெரிய மரத்தடியிலிருந்த கயிற்று கட்டில் அந்த வீட்டின் சொந்தகாரரும், பெரியவருமான சதாசிவத்தை எதிர்பார்த்து காத்திருந்தது. நானுந்தான், பொழுது விடிந்து இவ்வளவு நேரமாகியும் அவரை பார்க்காமலிருப்பது கண் இருந்தும் குருடனாய் இருப்பது மாதிரி தவித்துக் கொண்டிருந்தேன். பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா அவர் வீட்டின் கதவை தட்டி மாமா, மாமா என்று குரல் உசத்தி அழைத்துவிட்டு பதில் ஏதும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றாள்.

சதாசிவம் அந்த ஊருக்கு வேலை மாறுதல் காரணமாக வந்தவர், அந்த வேலை அவ்வூரிலேயே நிரந்தரமாக கிடைத்தவுடன், இந்தவீட்டை கட்டிக்கொண்டு தன் மனைவியுடன் குடியேறினார். இயற்கையின்பால் அவர் கொண்ட பற்றின் காரணமாக, அவர் வீட்டின் முன்னும் பின்னும் செடிகொடிகளும் மரங்களும் செழித்து வளர்ந்தன. அன்பான நல்ல மனைவி, வீடு, நிறைந்த வேலை, என்று வாழ்க்கை வசதிகளை அவருக்கு தந்த இறைவன், கொடுக்க மறந்தது குழந்தைச்செல்வம். ஆனால் அவர் அதை ஒரு பெரிய குறையாக எடுத்துக் கொள்ளாமல்  தன் உறவுக்கார குழந்தைகளுக்கு  தன்னால் இயன்ற உதவிகளை செய்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் ஊரில் பழகியவர்களும் உறவும் நச்சரித்த காரணத்தால் மிகவும் சிரமத்துடன், நான்கு குழந்தைகளுடன், வறுமையில் காலம்கழித்து வந்த அவருடைய ஒன்று விட்ட சகோதரி முறையுடைய அகிலாவிற்கு கடைசியாக பிறந்த ஆண்குழந்தையை, அவள் சம்மதத்துடன் தத்து எடுத்து வளர்க்க ஆரம்பித்தார். குழந்தையும் அவரிடமும், அவர் மனைவியிடமும் நன்றாக ஒட்டிக்கொண்டது. அவருடைய முழுகவனமும், குழந்தையுடன் இருக்க, அவர் இதுநாளும் வளர்த்து வந்த  செடி கொடிகள் காணமல் போயின. ஆனாலும் வீட்டு வாசலிருந்த மரம் மட்டும், நீ என்னை  கவனிக்காது விட்டாலும் நான் உன்னை மறக்க மாட்டேன், என்று பாசத்துடன் அவரை  அரவணைத்து கொள்வது போல, அவர் வீட்டின் மேல் சாய்வது போன்ற  தோற்றத்துடன் வளர ஆரம்பித்தது. குழந்தையும் மரமும் ஒருசேர நன்கு வளர்ந்தன.

வருடங்கள் உருண்டோடி சதாசவத்தின் பையனை வாலிபனாக்கியது. அவனை நல்ல முறையில் படிக்க வைத்து, அவனின் படிப்புகேற்ற ஒரு      வேலையும் கிடைத்தவுடன், அவனுக்கு உரிய வயதில் ஒரு திருமணத்தையும் நடத்தி, சிலவருடங்களில் பேரனுடனும் கொஞ்சி மகிழ்ந்தார் சதாசிவம். கணவருடன் அவர் மனம் கோணமல் இதுநாள்வரை சந்தோஷத்துடன் வாழ்ந்து வந்த அவர் மனைவி தன்  கணவரையும் வீட்டையும் மகன், மருமகளிடம் ஒப்படைத்து விட்டு திருப்தியுடன் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தாள். அன்பான மனைவியின் மறைவுக்குப்பின் வயதின் மூப்பும், தனிமையும் சேர்ந்து கொள்ள சதாசிவம், தன் மகனையும், வாசலில் இருக்கும்  மரத்தையும் துணையாக கருதி வாழ்ந்து  வந்தார்.

கட்டில் சப்தம் கேட்டு கலைந்தேன். சதாசிவம், அப்பாடா, என்று முனகியவாறு வந்தமர்ந்தார். அவர் முகம்  மனச்சோர்வை வெளிக்காட்டியது. அவர் உடல் நலமில்லாமலிருப்பதை முகம் கண்ணாடியாய் காட்டியது என்னை வருத்தியது. மனைவியின் மறைவுக்குபபின் மனிதர் மிகவும் தளர்ந்துதான் போய் விட்டார், என்ன செய்வது, என்று நான் வருந்தி கொண்டிருந்தபோது பக்கத்து வீட்டிலிருந்து வெளிப்பட்ட சுசீலா இவரை பார்த்ததும் ஓடிவந்தாள். “மாமா, இப்ப உடம்பு எப்படியிருக்கு? காலையிலே நாவந்து கதவ தட்டிப்பாத்தேன். நீங்க எந்திரிக்கலே, ஒரே கவலையாயிருந்திச்சி, இப்ப காய்ச்சல் குறைஞ்சிருக்கா? எப்படியிருக்கு மாமா”, என்று வாஞ்சையுடன் விசாரித்தாள்.

“பரவாயில்லையம்மா, பாவம்; உனக்குத்தான் சிரமம். உன் வீட்டிலுள்ளவர்களை கவனிச்சிக்கிறது போறாதுனு, நடுநடுவே  என்னை வேறே பார்த்துக்க வேண்டியதாயிடிச்சு, எல்லாம் என் நேரம்”, என்று நொந்து கொண்டார்.

“இதுலே என்ன கஷ்டம் மாமா, என் அப்பாவை நான் கவனிக்க மாட்டேனா, அதுமாதிரிதான் இதுவும். இதுக்கெல்லாம் கவலை படாதீங்க, என்றவள்,உங்களுக்கு சாப்பிட இன்றாவது இட்லி எடுத்து வரட்டுமா?” என்றாள் அக்கரையுடன்.

“வேண்டாம்மா, கொஞ்ச நேரம் பொறுத்து சாப்பிட்டுகிறேன், அப்புறமா, நேற்று மாதிரி வெறும் கஞ்சி மட்டும் போட்டு கொடு போதும்”, என்று அவளை தடுத்தார்.

“சரி மாமா, நான் உங்க வீட்டை பெருக்கி சுத்தபடுத்துறேன்”, என்றபடி அவரின் அனுமதிக்கு காத்திராமல் அவர் வீட்டினுள் சென்றாள்.

“பாவம், இந்த பெண், மகனும் மருமகளும் தவிர்க்க முடியாத உறவு வீட்டின் திருமணத்திற்கு ஒருவாரம் அவரை தனிமையில் விட்டு சென்ற பின் இவள்தான் பாசத்துடன் அவரை கவனித்து கொள்கிறாள். இதில் இரண்டு நாட்களாக சற்று உடல் உபாதை வேறு”, என்று சதாசிவம் மனம் கனிந்து யோசித்துக்கொண்டிருக்கையில், அடுத்த தெருவிலிருக்கும் அவருடைய நண்பர் பாலு சற்று வேகமாக, ஓடி வராத குறையாக மூச்சிறைக்க வந்தார்.

“சதா, நேற்று உனக்கு உடம்பு சரியில்லையாமே, இப்பத்தான் குமார் சொன்னான். உடனே ஓடிவர்றேன் இப்ப எப்படி இருக்கு, என்று கவலையுடன் கேட்டபடி பக்கத்து வீட்டை பார்த்தார் அப்போது சதாசிவத்தின் வீடடிலிருந்து வெளிவந்தசுசீலாவை பார்த்ததும், “அடேடே, சுசீலா, நீ இங்கேதான் இருக்கியா? இப்பத்தான் குமார், சதா மாமாக்கு நேற்று நல்ல ஜீரம், அவரை கட்டாயபடுத்தி டாக்டரிடம் அழைச்சிகிட்டு போய் மருந்து மாத்திரை வாங்கி கொடுத்தேன். சுசீலாவையும் அவரை அடிக்கடி பாத்துக்க சொல்லியிருக்கேன்னு , சொல்லிட்டு போறான். உடனே பதறி அடிச்சிகிட்டு ஓடி வர்றேன், நீதாம்மா இவனை பாத்துக்கணும், இந்த வயசில் இவனை தனியே விட்டுட்டு இவன் பையன் போகலாமா? நீயே சொல்லு, இவன் உறவை விடவா அந்த உறவு அவனுக்குபெரிதாகி  விட்டது?” என்று கோபத்துடன் வெடித்தார்.

“அவனை குத்தம் சொல்லாட்டா உனக்கு உறக்கமே வராதே, சரி விடு, எனக்கு நாளைக்கு சரியாடும் சாதரண ஜீரந்தானே, அவனும் இன்னும் இரண்டு நாளில் வந்து விடுவான்..” மெல்லிய குரலில் மகனுக்கு ஆதரவாக பேசினார் சதாசிவம்.

“உன் மகனை ஒரு வார்த்தை சொல்லவிட மாட்டியே, ஆனால் அவன் முந்தி மாதிரி இல்லை தெரியுமா,  உனக்கு தெரிஞ்சாலும் நீ வெளியிலே காட்டிக்க மாட்டே, உன் சுபாவம் அப்படி, மனசுகுள்ளேயே வச்சு பூட்டி  மத்தவங்களோட மகிழ்ச்சியை மட்டும் பார்த்து சந்தோஷபடறவன் நீ….. உன் பையன் ரொம்ப மாறிட்டான் வளர்த்த பாசம் உன் கண்ணை மறைக்கிது, நான் எத்தனையோ தடவை சொல்லிட்டேன். நீ காது கொடுத்து கேட்க மாட்டேங்கிறே…” என்று அங்கலாயத்தபடி புலம்பி தள்ளினார் பாலு.

இவர்களது உரையாடலை சற்று தர்மசங்டத்துடன் கேட்டுக்கொண்டிருந்த சுசீலா, “மாமா, ஒரு அரைமணி நேரம் கழித்து கஞ்சி போட்டு கொண்டு வரவா?” என்று வினவியபடி நகர யத்தனித்தாள்.

“சரியம்மா, என்று அவளை அனுப்பிய சதாசிவம், நண்பரை பார்த்து அட, என்னப்பா, அந்த பொண்ணு முன்னாடி சொன்னதையே திருப்பி, திருப்பி சொல்லிகிட்டிருக்கே, அவ எம்பையனை பத்தி தப்பா நினைக்க மாட்டாளா.. ” என்று முடியாமல் ௬றியவர் அலுப்புடன் கண்களை மூடிக்கொண்டார்.

நண்பரின் இயலாமையை கண்டு மனம் கசிந்த பாலு அவர் அருகில் அமர்ந்து அவர் கையை பற்றிக்கொண்டார்.
“சரி, ஏதோ…. உன்னை இந்த நிலமையிலே பாத்தது மனசு தாங்கலே, என்னாலே முடியலே சதா.. சொல்லிட்டேன்.. இது சுசீலாவுக்கும், ஏன் அவ புருஷன் குமார்க்கும் தெரியும். போன வாரம் குமார்தான், உன் பையனோட குணத்தை பத்தி என்கிட்டே சொல்லி எவ்வளவு வருத்தபட்டு பேசினான் தெரியுமா? இன்னொரு விஷயம், இந்த வீட்டை வித்துட்டு சென்னைக்கே உன்னையும் ௬ட்டிக்கிட்டு போக போறானாம். உன்கிட்டே அது பத்தி சொல்லி இந்த வீட்டை விக்கிறதக்கு உன் சம்மதத்தை எப்படியாவது வாங்கனுன்னு குமார்கிட்டே உன்பையன் சொல்லியிருக்கான் தெரியுமா? நீ வாழ்ந்த இந்த வீட்டை விட்டு, இந்த ஊரை விட்டு, ஏன், பாசத்துடன் பார்த்து பார்த்து வளர்த்தியே.. இந்த மரத்தை விட்டு, எங்கைளயெல்லாம் விட்டு எப்படி போவே சொல்லு. நாங்களும் உன்னை விட்டுட்டு எப்படி இருப்போம்? இத்தனை வருஷ பழக்கத்தில் உன்னை பார்க்காமல், சந்தர்ப்ப சூழ்நிலையில், வாரக்கணக்கில், ஏன், மாதக்கணக்கில் ௬ட இருந்திருக்கிறேன். ஆனால் உன்னை விட்டு நிரந்தரமாக……. எப்படி சதா?” மேற்கொண்டு பேச முடியாமல் குரல் தளுதளுக்க கண்கள் கசிய நண்பரின் கையை இறுக பற்றிக் கொண்டார் பாலு.

நண்பரின் பாசம் சதாசிவத்தின் உள்ளத்திலும் இடம் பெயர்ந்தது. ஆறுதலாக பாலுவின் தோளில் தட்டியவர் தன் கண்ணில் வழிந்த நீரை துடைத்தவாறு, “வருத்தபடாதே பாலு, நான் உங்களையெல்லாம் அப்படி விட்டுட்டு போயிடுவேனா, ஆனாலும் என் மகனின் பேச்சிலும் நியாயம் இருக்கு. அவனுக்கு வேலை உயர்வில் சென்னைக்கு மாற்றியிருக்கிறார்கள். அவன் எனக்காக அதை வேண்டாமென்று மறுத்து என்னுடன் தங்கி விட்டால், நானே அவன் முன்னேற்றத்திற்கு தடையாய் இருப்பேனில்லியா, அவன் என்னிடமும் விபரங்கள் சொல்லி வருத்தபட்டு, என்னையும் விடமுடியாமல்தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறான். மற்றபடி அவனிடம் எந்த தவறுமில்லை, இனியாவது அவனை புரிந்து கொள்,” என்று மகனுக்காக பரிந்து பேசினார்.

மகன் பேரில் சதாசிவம் வைத்திருந்த அளவுகடந்த பாசத்தை முழுமையாக உணர்ந்தவர் பாலு. அவன் படிப்பிற்காக,
அவன் தேவைகளுக்காக, தன் மனைவியின் நகைகளை விற்றும், தன் அலுவலகத்தில் ஓவர்டைத்தில் வேலை செய்து சம்பாதித்து கொடுத்தும் அவன் மனம் கோணதபடி வளர்த்து ஆளாக்கியவர். அவனும் இவருடைய அன்பை புரிந்து இவரிடம் மிகவும்  பாசமாக  இருந்ததென்னவோ உண்மைதான்.  நாளடைவில் தனக்கென்று ஒரு வாழ்க்கை வந்தவுடன் அவனுடைய சுபாவத்தில் சில மாறுதல்கள் வந்ததை பாலு சதாசிவத்திடம் உணர்த்திய போது அவர் அதை மறுத்து மகனுக்காக வாதிடுவார் இது அவ்வப்போது இருவருக்கிடேயே நடக்கும் ஒரு விஷயந்தான். ஆனால் இந்த தடவை மகன் வீட்டை விற்று விட்டு வேறுருக்கு அழைத்து செல்ல போவதையும், சதாசிவம் சாதாரணமாக எடுத்துக் கொண்டது பாலுவுக்கு ஆச்சிரியமாக இருந்தது.

மகனின்  நடவடிக்கைகளின் மாற்றங்கள் சதாசிவமும் உணராமலில்லை. ஆனால் அவரின் இயல்பான பொறுமையும் மற்றவர்களிடம் தன் வருத்தத்தை பகிர்ந்து கொள்ள ௬டாது என்ற வைராக்கிய மனப்பான்மையும், அதற்கும் மேலாக தன் மகனிடம் வைத்திருந்த கள்ளமில்லா அன்பும், மகனை பற்றி யார் குறை ௬றினாலும், அவரை எதிர்த்து மகனுக்காக பேச வைத்தது. பத்து, பதினைந்து நாட்களுக்கு முன்பு அவனுடைய உடன்பிறந்த தங்கையின் திருமணத்திற்காக பத்திரிக்கை வைத்து நேரில் அழைத்து செல்ல வந்திருந்த அவனுடைய அம்மாவிடம், பெற்ற அம்மாவிடம் .. “என்னிடம் ஏது அவ்வளவு பணம், என்னை நம்பியா அவ்வளவு பெரிய இடத்தில் சம்பந்தம் வைத்துக்கொண்டாய்?  என்னதான் நான் உன்மகன் என்றாலும் நீதான் பணத்துக்காக அன்றே என்னை விற்று விட்டாயே.. ஏன்அந்த பணம் போதவில்லையா?” என்று அவன் தாயின் விசும்பலுக்கிடையே கத்திக்கொண்டிருந்த மகனை சதாசிவம் சமாதானபடுத்தி தன் தங்கையை தனியே அழைத்து சென்று விபரத்தை கேட்ட போது, “தேவைபடும் அந்த பணம் கிடைக்காவிட்டால் குறிப்பிட்ட நாளில் நிச்சயத்திருக்கும்  தன் மகளின் திருமணமே நின்று விடும்.. அதனால்தான் அவன் என் வயிற்றில் பிறந்தவன் என்ற உரிமையில் அவனிடம் கேட்டு விட்டேன்.  மற்றபடி அவனையும் உங்களையும் சங்கடபடுத்தும் எந்த நோக்கமும் எனக்கில்லை அண்ணா..”
என்று அவள் கதறி அழுதவுடன் மனம் கேட்காமல் தன் மனைவியின் இருந்த கொஞ்ச நகைகளையும் தன் கைவசம் இருந்த கொஞ்ச பணத்தையும்,  முதலில் வாங்க மறுத்த, அவளிடம் எடுத்து கொடுத்து “கடனாகவாவது வாங்கிக்கம்மா.. உனக்கு எப்ப முடிகிறதோ, அப்ப திருப்பி  கொடு நான் கொடுத்தால் என்ன.. உன் பையன் கொடுத்தால் என்ன.. திருமணம் தடை படாமல் நடக்க வேண்டும் அதை மனதில் வைத்துக்கொள். இப்போதைக்கு என்னிடம் சும்மா இருக்கும் இந்த பணம் கல்யாண செலவுக்காவது உதவட்டுமே… வாங்கிக்கோ..” என்று
அவளை சமாதானபடுத்தி கொடுத்ததும், அவள் அதை வாங்கிகொண்டு அவர் காலில் விழுந்து வணங்கி “என் உயிர் உள்ளவரை நீங்கள் செய்த இந்த உதவியை மறக்க மாட்டேன் அண்ணா..” என்று மனம் உருகி ௬றி விட்டுச்சென்றாள்.

இரண்டு நாட்கள் கழித்து தூக்கம் வராத  ஒரு இரவில் தன் அறையிலிருந்து வெளிவந்து ஹாலில் ஷோபாவில் படுத்தபடி ஏதோ நினைத்தபடி தூக்கத்தை வரவழைக்க முயற்சி செய்து கொண்டிருக்கையில் மகன் சத்தமாக தன்மனைவியிடம் பேசியதை யதேச்சையாக கேட்ட அவர் உண்மையில் அதிர்ந்துதான் போய் விட்டார்… “அன்று பார்த்தாயா, என்னிடம் ஒரு வார்த்தை ௬ட கேட்காமல் அம்மாவின் நகையையும் பணத்தையும் எடுத்து  என் அம்மா  விடம் தாரை வார்க்கிறார். அவர் சொந்த பையன் என்றால், இப்படி கொடுக்க முடியுமா, இல்லை கொடுப்பாரா, வளர்த்தவன்தானே.. இவனிடம் என்ன கேட்பது என்ற எண்ணம்… இவர் சொத்தில் எனக்கு என்ன உரிமை என்ற அகம்பாவம், அதனாலே நான் சொல்றதுதான் சரி நாம் சென்னைக்கு போறதுக்கு முந்தி இந்த வீட்டை வித்துட்டு அவரையும் ௬ட்டிகிட்டு போறதுதான் நல்லது, இவரை இங்கே விட்டுட்டு போனால் இந்த வீட்டையும் யாருக்காவது கொடுத்திடுவாரு இருக்கும் ஒரு சொத்தும் போய் விடும்..”  அவன் பேச பேச அவர் மனது உடைய ஆரம்பித்தது…

“சே, என்ன, இவன் இப்பிடியெல்லாம் பிரித்து பேச ஆரம்பித்து விட்டான்.  தெரிந்தவர்கள்  குறை சொல்லும் போததெல்லாம்  அவனுக்காக அவர்களிடம் பரிந்து பேசியதெல்லாம் நினைவுக்கு வந்தது. அப்படி யாருக்கு கொடுத்து விட்டேன் அவன் ௬ட பிறந்த தங்கைக்கு, அவனை பத்து மாதம் சுமந்து பெற்ற அவன் அம்மாவின் சிரமத்தை குறைக்கத்தானே கொடுத்தேன் சொல்லபோனால் அவன் கடமையைதானே நான் செய்தேன். நான் ஏதோ குற்றம் செய்து விட்ட மாதிரி பேசுகிறானே….” நினைக்க நினைக்க மனம் ஆறவில்லை. மொத்தத்தில் அன்று இரவு தூக்கம் முழுமையாக பறி போனது அவருக்கு.
அதன் பின் திருமணத்திற்கு தன்னுடன் வரச்சொல்லி மகன் அழைத்தபோது ௬ட, “நான் எதுக்குப்பா, நீயும், உன் மனைவியும், போய் வாருங்கள் நான் வரவில்லை..” என்று ஏதோ சாக்கு போக்கு சொல்லி தப்பித்து விட்டார். அங்கு சென்ற பிறகு இவன் ஏதாவது பேச போக பிரச்சனை பெரிதாகி அது கல்யாணத்தை பாதித்து விட்டால் பாவம், அந்த பெண்.. என்ற கழிவிரக்கத்தில் அவர் மனம் திருமணத்திற்கு செல்ல ஒப்பவில்லை. இந்த விஷயமெல்லாம் பாலுவுக்கு தெரியாது. வழக்கபடி தன் மனதில் போட்டு புதைத்து விட்டார். ஏற்கனவே தன் மகனை பற்றி குற்றம் சொல்லி கொண்டிருக்கும் பாலுவுக்கு இது தெரிந்தால் தன் மகனை நிற்கவைத்து கேள்வி கேட்டு பிரிவை பெரிதாக்கி விடுவார் என்ற பயத்தில் சதாசிவம் பாலுவிடம் எதுவும் ௬றவில்லை.

இருவரின் யோஜனைகளிலும் சிறிது நேரம் மெளனமாகவே நகர்ந்தது. அப்போது சுசீலா கஞ்சியும் மாத்திரையும்
கொண்டு கொடுத்து விட்டு, “கஞ்சி குடித்து விட்டு மாத்திரை போட்டுக்கொள்ளுங்கள் மாமா” என்று ௬றி விட்டுச்சென்றாள்.

சற்று நேரம் பொறுத்து மெளனம் கலைந்த பாலு,  “சரி, சதா, நா கிளம்புறேன். உன் மகனை பத்தி குத்தம்  சொல்ல எனக்கென்ன ஆசையா.. உன்னோட நிலையை பாக்க பொறுக்காமேதான் மனசுலே படறதை சொல்றேன். நீ தப்பா எடுத்துகிட்டாலும் சரி, மறுபடியும் சொல்றேன், இந்த வீட்டை விக்கறதுக்கு மட்டும் நீ சம்மதிக்காதே, அவ்வளவுதான் என்னாலே சொல்ல முடியும். சரி, நீ கஞ்சியை குடிச்சிட்டு, மாத்திரை போட்டுகிட்டு நல்லா ரெஸ்டு எடுத்துக்கோ, நா மறுபடியும் சாய்ங்காலம் வந்து பாக்கறேன்” என்றபடி எழுந்தார்.

“சரி, போய்வா,” என்று நண்பருக்கு விடை கொடுத்த சதாசிவம் கஞ்சியை எடுத்து குடிக்க ஆரம்பித்தார்.

அன்றொரு நாள் தன்னை சந்திக்க வெளியுரிலிருந்து வந்திருந்த நண்பனை என் அருகாமையில் நின்றபடி விடைகொடுத்து அனுப்பும் போது, இவர் மகன் அவனிடம் ௬றிக்கொண்டிருந்ததை, நானுந்தான் கேட்டேன், “ஆமாப்பா, இது ஒரு நல்ல சான்ஸ், இதை நா கோட்டை விட்டுட்டா அப்புறம் கிடைக்கவே கிடைக்காது.  எப்படியாவது இந்த பிரோமோஸனை பயன்படுத்திகிட்டு சென்னைக்கு போய்ட்டா, அப்புறம் ஒரு ஆறு மாசத்திலே வெளிநாடு  போற வாய்ப்பு வருது. அது கிடைச்சா லைப் பிரமாதமாயிருக்கும். அதுக்காக நா சென்னைக்கு போக ஒத்துக்கனும், அப்பாவையும் ஒத்துக்க வைக்கனும். வேற வழியில்லை, இந்த வீட்டை வித்துட்டு சென்னையிலே செட்டிலாக வேண்டியது தான்.” அவன் குரலில் பதவி உயர்வின் ஆசையும் பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற வெறியும் தெரிந்தது...

“சரி நீ சென்னைக்கு போய் செட்டிலான பிறகு உனக்கு வெளிநாடு வாய்ப்பு வந்தால்  உன் குடும்பத்தை விட்டுவிட்டு செல்ல முடியுமா,” என்ற அவன் நண்பனின் கேள்விக்கு, “இல்லை இல்லை வெளிநாட்டில்  எப்படியும் சில வருடங்கள் இருக்க வேண்டிவரும். அதனால் பேமிலியை விட்டுட்டு போக முடியாது. அப்பாதான் பிரச்சனை, அவர் உடம்புக்கு அந்த ஊர்ஒத்துக்காது. முடிந்தால் அவர் தனியாக இருக்கட்டும் இல்லையென்றால் ஏதாவதொரு முதியோர் இல்லத்தில் அவரை விட்டுட்டு போக வேண்டியதுதான்..” என்ற அவன் பதிலில் நான் ஆடி போய் விட்டேன் இதை அவரிடம் நான் எப்படி சொல்வதென்று தெரியாமல் தவித்துக்கொணடிருந்த போதுதான் அவர் நண்பர்  பாலு அதுபற்றி அவரிடம் விவாதித்தது எனக்கு சற்று ஆறுதலாக இருந்தது. தனக்காக தன் உழைப்பையும், வாழ்க்கையையும், தியாகம் செய்தவரை, வயதான காலத்தில் அவரை கவனித்து கொள்ள வேண்டியது தன்கடமை என்று உணராமல், சுயநலமாக திட்டமிடும் மகனுக்காக, இன்னும் வாதிடும் அவரை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது.

மனிதன் பிறக்கும்போதே சுயநலத்துடன்தான் பிறக்கிறான். அவன் தேவைகள், அவன் ஆசைகள் இதுமட்டுமே நிறைவேறினால் போதும் என்ற மனதுடன்தான் வளர்கிறான், வாழ்கிறான். பிறந்த குழந்தை அன்னையின் அரவணைப்பிலிருந்து இறங்கி நடக்க கற்றுக்கொள்வது, தான் விரும்பும் இடத்திற்கெல்லாம் தவழும் சுயநலத்திற்க்காகத்தான். இப்படி தன் ஆசைக்காக தன் தேவைக்காக தான் விரும்பியபடி வாழ மனிதன் சுயநலத்தின் பிடியில் படிபடியாக சிக்குகிறான். தன்னை பெற்றவர்களுடனும், மற்றவர்களுடனும்,  குடும்பத்துடனும், இதர சொந்தபந்தகளுடனும் தன் குழந்தைகளுடனும் வாழும்போது இதே சிந்தனைதான் அவன் மனதில் மேலோங்கி நிற்கிறது. இறுதியில் வாழ்நாளின் கடைசியிலும் தன் வாரிசுகளை சார்ந்தே இருக்கிறான். மடிந்தபின்பும் தன் சந்ததியினர் தன் நினைவுநாளை நினைவு௬ர்ந்து கொண்டாட வேண்டுமென நினைக்கிறான். அந்த அளவுக்கு அவன் சுயநலத்துடன் ஒன்றி போகிறான். இப்படி பிறப்பிலிருந்து, இறப்புவரை தனக்காக மட்டுமே வாழஆசைபடும் மனிதன் தன்னுடன் வாழும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் போகிறான். அப்படி அதை உணர்ந்து அந்த குணத்தை சிறிது மாற்றியமைத்தானேயானால் அவன் உலகில் வாழத்தெரியாதவனாகிறான். திறமையற்றவன், ஒன்றுக்கும் உதவாதவன், உபயோகமில்லாதவன் இன்னபிற பட்டங்களை சுமக்கிறான்.அப்படி சுயநலமாகவாழும்போது மனிதனே மனிதனுக்கு பகையாகிறான்…

மனதில்  தோன்றிய இந்த சிந்தனைகள் சதாசிவத்தின் உள்ளத்தை முள்ளாக குத்தி வருத்தியது… “நானும் அப்படித்தானே..” என்று நினைத்த மாத்திரத்தில் மனசின் மைய பகுதியில் சுரீரென்று வலித்தது. “நான் வளர்த்த பையன், என் வளர்ப்பு மகன் என்னையை தஞ்சமென அண்டி இருக்க வேண்டும். வயதான என்னை நான் கண்மூடும் கடைசிகாலம் வரை தன் சொந்தவீட்டிலேயே சேர்ந்திருந்து அன்புடன் அனுசரித்து கவனித்துக்கொள்ள வேண்டும் என்ற சுயநலத்தில்தான், அவனுக்கு வேண்டியதெல்லாம் நான் பார்த்து, பார்த்து செய்தேனோ…” என நினைத்தபோது இதயம் வெடித்து விடும் போலிருந்தது.. கண்கள் கலங்க அருகிலிருந்த மரத்தை தழுவி கொண்டார். கைகளால் அதன் சொரசொரப்பை வாஞ்சையுடன் தடவியபோது உள்ளம் சற்று லேசாகியது. அண்ணாந்து மரத்தை அதன் உச்சி வரை பார்த்தார். மரங்கள்தான் எத்தனை மேன்யானவை….. உயரமான மனிதனை… மரம் மாதிரி வளர்ந்திருக்கிறான்… என்பார்கள். ஆனால் மரத்தின் சிறப்பாம்சங்கள் மனிதனிடம் முழுமையாக இருந்துவிட்டால் அவன் உண்மையிலேயே உயர்ந்தவன்தான். தன்னை நாடி வருபவர்களுக்கு நிழல்தந்து,  பறவைகளுக்கு புகலிடமாக இருந்து, சுயநலமில்லாமல், தனக்காகவாழாமல், தான் வாழும் ஒவ்வொரு காலகட்டத்திலும், பூ, காய், கனி, என மரங்கள் பிறருக்கு உதவியாக இருப்பதுடன், மடிவை சந்தித்தும் மரங்கள் மனிதனுக்கும், பிறஉயிர்களுக்கும், எவ்வளவு உதவியாக இருந்து வாழ்ந்து காட்டுகிறது. மரங்களுடன் வேறு எதையும் ஒப்பிட முடியாது. அதனால்தான் மரத்தின் பெருமை விளங்குமாறு, அதனை அத்தனை உயரமாக படைத்திருக்கிறான் இறைவன்… “எனக்கு அடுத்த பிறவி ஒன்றிருந்தால் உன்மாதிரி மனிதனை நேயத்துடன் கவனித்து கொள்ளும் ஒருமரமாக உன்னருகிலேயே பிறக்கவேண்டும்…” என்று முணுமுணுத்தவாறு கண்களில் நீர் மல்க மீண்டும் அன்புடன் மரத்தை லேசாக அணைத்துக்கொண்டார் சதாசிவம்.

அவர் சொன்னதை ஆமோதித்து அவரை அமைதிபடுத்துவது போல் மரத்திலிருந்து சில இலைகள் அவர் மீது விழுந்து பின் தரையை தொட்டன. மனஉளைச்சல் தந்த அலுப்பின் காரணமாக கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டார் சதாசிவம். இதுநாள்வரை வாழ்ந்த வாழ்க்கை சுவடுகள் மனக்கண் முன் வந்து போயின. அதிகம் பேசாது பிறர் மனம் கோணது, தனக்கென வாழாது தமக்கென்று வாழ்ந்து மறைந்த மனைவியின் நினைவில், மனது அழுததால் அவர் கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது. நண்பர் பாலு எச்சரித்து சொன்ன விஷயங்கள் மனதை சலனபடுத்தியது. பட்ட பகலில் எல்லோரும் பார்க்கக்௬டிய பொது இடத்தில் இப்படி சிறு குழந்தையாக உணர்ச்சிவசபடுகிறோமே என்ற வெட்கத்தில் கண்களை அவசரமாக துடைத்தபடி திறந்தபோது கண்கள்திறக்க முடியாமல் எரிந்தன. காலையில் சற்று குறைந்திருந்த காய்ச்சல் இப்போது மறுபடி அதிகமாயிருந்தது. சுசீலா கஞ்சியுடன் கொடுத்துச்சென்றிருந்த மாத்திரையை, எடுத்து போட்டுக்கொள்ள வேண்டுமென்று நினைத்தபோதில், எதற்காக மாத்திரை சாப்பிட்டு அப்படி இந்த உடம்பை பாதுகாக்க வேண்டுமென்ற வெறுப்பு ஒருகணம் தோன்றியது…. “யாருக்கும் சிரமம் கொடுக்காமல் அழைத்துக்கொண்டு போய்விடு…” என்று
இறைவனிடம் வேண்டிக்கொண்டே இருக்கையில், காற்று சில்லென்று அடிக்க ஒரிரு மழைத்துளிகள் முகத்தில் விழுந்தது.

கண்களை சிரமபட்டு திறந்து பார்த்தார். மதியம் அடித்த வெயிலுக்கு பலத்த மழை வரும்போலிருந்தது. வானம் ஓர் மூலையில் ஒரு கறுத்த பெரிய யானையை போன்ற தோற்றத்துடன் கருமையாக காட்சியளித்தது. மழை மேகங்கள் ஆங்காங்கே பரவி நீலவானத்தை கறுப்பாக்கும் லட்சியத்தை மிகதுரிதமாக நிறைவேற்றும் பணியில் செயல்பட ஆரம்பித்திருந்தன… மிகவும் சிரமத்துடன் எழுந்து நின்ற சதாசிவம் குடித்து முடித்திருந்த கஞ்சி பாத்திரங்களையும், மாத்திரை கவர்களையும் ஒரு கையில் எடுத்தபடி, மற்றொரு கையால் கட்டிலை மடித்து அருகிலிருக்கும் வீட்டு சுவற்றில் சாய்த்துவிட்டு தள்ளாடியபடி நடந்து வீட்டினுள் சென்று கதவை அடைத்துக்கொண்டார்..

வந்தும், வராது ஏமாற்றிக்கொண்டிருந்த மழை அன்று காற்றையும் துணைக்கழைத்துக்கொண்டு இரவின் நடுஜாமம் வரை தன் மனம்போனபடி கடுமையாக பெய்த சந்தோஷத்துடன் சற்று ஓய்ந்தது. மழை விட்டும், தூரல் விடாத,  புலர்ந்தும், புலராத அந்த அதிகாலை பொழுதில்…. என்னைச்சுற்றி, ஒருசிறு ௬ட்டம் ௬டியிருந்தது… நல்லவேளை, அவர் வீட்டின் மேல் விழுந்து அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல், சாலையில் விழுந்ததே.. எத்தனையோ முறை இதை வெட்டுமாறு நாம் அவருக்கு எடுத்துச்சொல்லியும் அவர் இதன்மேல் வைத்திருந்த அன்பு காரணமாக மறுத்து வந்ததற்க்கு பிரதிபலனாக, இது அவரை காப்பாற்றி விட்டது.. என்று என்னை புகழ்ந்தும், எனக்கு பாராட்டுரைகள் ௬றி கொண்டும் இருந்தார்கள்.

இரவில் அடித்த காற்றுக்கு ஈடுகொடுக்கமுடியாமல்  என் உயிரை கையில் பிடித்துக்கொண்டு, எல்லோரும் ௬றியுள்ளபடி, அவர் வீட்டின் மேல் சாய்ந்து விழாமலிருக்க, ஒவ்வொரு நொடியும், இறைவனை வேண்டிக்கொண்டு, மரண அவஸ்தையுடன் மரமாகிய நான், பட்ட வேதனை, காலையில் கண் விழித்ததும், சாலையின் குறுக்கே, நான், விழுந்து கிடந்ததை கண்டு களிக்கும், இவர்களுக்கெங்கே புரிய போகிறது. எப்படியோ, எனக்கு உயிரை தந்து வளர்த்தவருக்கு, கெடுதல் விளைவிக்காமல் இம்மண்ணுலகை விட்டு மறைவது மகிழ்ச்சியாக இருக்கிறது. வேரோடு நான் விழுந்து விட்டாலும், எனது ஆணிவேரும் மண்ணும் சற்று உறவாடி கொண்டிருந்ததால், எனது உணர்வுகள் முழுவதும், அற்று போகாத அந்தநிலையில் என் உள்ளம் அவரை தேடியது. எங்கே அவர், அவருக்கு உடம்பு பூரண குணமாகி நலமுடன் இருக்கிறாரா, என்னைச்சுற்றி இத்தனை பேர்கள் இருந்தும் அவரைக்காணவில்லையே, என்னவாயிற்று அவருக்கு, சத்தம் கேட்டு இதற்குள் கதவை திறந்து வெளிவந்திருப்பாரே, இன்னமுமா உறங்கி கொண்டிருக்கிறார்??? என் உணர்வுகள் முழுவதும் செத்துப்போவதற்குள் அவரை கடைசியாக ஒருமுறை பார்த்து விடலாமே… என்று நான் அங்கலாய்த்தபடி மனம் தவித்த போது, அவர் வீட்டு வாசலில் நின்றிருந்த சுசீலாவின், ஓ…. வென்ற அலறலில், என்னை சுற்றியிருந்த அத்தனைக்௬ட்டமும் அவர் வீட்டுக்கு ஒடியது. ஐயோ!!! என்னவாயிற்று அவருக்கு…. தெரியவில்லையே.. என்று உள்ளம் கீழே விழுந்து கிடந்த அந்தநிலையில் ௬ட பதறியது.

சாலையின் குறுக்கே நிகழ்ந்த என்  சாவு வாகனங்களின் பாதைக்கு இடைஞ்சலாக இருப்பதால், மதியம் வேருடன் உறவாடியபடி மடிந்தும், மடியாமலும், கிடக்கும் என் உடலை வெட்டி அப்புறப்படுத்த கையில் கோடாரியுடனும்,  இதர ஆயதங்களுடனும் நான்கைந்து பேர்கள் என்னிடம் நெருங்கினார்கள். அவர்கள் பேசிய விஷயங்கள், அவரகள் கையிலிருந்த கோடாரியை விட பலமாக என்னுள் இறங்கின……..
இரவு பெய்த பேய் மழையிலும், அவரை சந்தித்து அவர் உடல் நலத்தை பற்றி விசாரித்து அவருக்கு உணவு கொடுத்துச்சென்ற குமாரிடம்,,,, தனக்கு இப்போது பரவாயில்லை, மிகவும் களைப்பாக மட்டும் இருக்கிறது. நன்கு உறங்கி எழுந்தால் நாளை சரியாகிவிடும்….. என்று௬றி அனுப்பியிருக்கிறார் சதாசிவம். இந்நிலையில் காலையில் வீட்டின் முன் இத்தனை அமர்களமாயிருந்தும் அவர் எழுந்து வராத நிலைகண்டு அவரை எழுப்பி விஷயத்தை சொல்லாமென்று, சுசீலா அவர் வீட்டு கதவை நீண்ட நேரம் தட்டியும் அவர் திறக்காமல் போகவே அவர் படுத்திருந்த அறை ஜன்னல் வழியே அவரை பார்த்து விட்டு, அவரது நிலைகண்டு சந்தேகித்து…. ஓ… வென்று கத்தியிருக்கிறாள்.
வீட்டின் உட்பக்கம் பூட்டியிருந்ததால், கதவு உடைத்துக்கொண்டு அனைவரும் சென்று பார்த்ததில், அவர் உயிர் இரவு உறக்கத்திலேயே பிரிந்திருந்தது… நேற்று வரை நல்லாயிருந்த மனிதர் இப்படி திடீரென்று போய் விட்டாரே… எத்தனை நல்ல மனிதர். ஒருவரிடமும் கோபடாமல், அனைவரிடமும் அன்பாக பழகி, அனைவருக்கும் தன்னால் முடிந்தளவு உதவி செய்து வாழ்ந்தவர்….
இந்த மாதிரி மனிதர்களை பார்ப்பதே கஸ்டந்தான்… நல்லவர்களுக்குத்தான் இந்த மாதிரி நல்ல சாவு கிடைக்கிறது.. ஆனால் நமக்குத்தான் மனசு தாங்கவில்லை. ரொம்ப கஸ்டமாயிக்கு… அவர் பையனுக்கும் உறவுகாரங்களுக்கும் தகவல் தந்தருக்கிருக்கிறார்கள். இன்று இரவுக்குள் அவர்கள் வந்து விட்டால், நாளை அவர் கிளம்பி விடுவார். அதற்குள் இந்த மரத்தை வெட்டி அப்புறபடுத்தி விட்டால் நல்லது….

பெருமூச்சு விட்டவாறு கனத்த இதயத்துடன் கண்ணீர் மல்க அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்..
அவர்கள் பேசபேச என் இதயம் சுக்கு நூறாக வெடிப்பதை நான் உணர்ந்தேன்…. ஐயோ!!! இரவெல்லாம் மழை, காற்றுடன் நடந்த பெரும் யுத்தத்தில் நான் ஜெயித்து விட்டேன் என்று இறுமாந்து போயிருந்தேனே…. ஆனால் என்னுடன் போட்டியிட்டு கொண்டு அந்த எமனும் ஜெயித்துவிட்டானே… அவரை உயிருடன் கடைசியாக அருகில் நேற்று பார்த்தது நினைவுக்கு வந்தது.. அதுவே போதுமென்று அவரையும் என்னையும் ஒருசேர பிரித்து வி்ட்டாயா இறைவா!!! ஏன்இப்படி செய்து விட்டாய்??? என் உடம்பில் பட்ட வேதனையையும் படும் வேதனையையும், பொருட்படுத்தாமல்  மனம் பரிதவித்தது. கடவுளே!!! இனி எனக்கும் ஒரு பிறவி என்று ஒன்று இருந்தால்  அவருடன் சேர்ந்து வாழ மீண்டும்  ஒரு மரமாகவே பிறந்து அவருடன் இணைபிரியாமல் இருக்கும்படி செய்வாயா??? என்று வேண்டிக்கொண்டிருந்த போது என் உணரவுகளும் கொஞ்சகொஞ்சமாக மங்க தொடங்கின…
மறுநாள்…. அவரும், நானும்…. இந்த பிறவியில் வெவ்வேறு ஊர்திகளாயினும் ஒருசேர பயணமாவோம் என்று நினைத்தபோது அத்தனை வருத்தத்திலும், இனம்புரியாத ஒரு துளி ஆனந்தம் உதயமானது……

அவரும், நானும்

Advertisements
This entry was posted in கதைகள், Story and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s