அன்பு மலரும் போது

சுமியின் கண்கள் கூடத்து அறையில் இருந்த பெரிய கடிகாரத்தில் தவிழ்ந்தன. ஆயிற்று, இன்னும் ஒரு மணி நேரத்தில் அவளது உற்ற தோழி நளினியின் கழுத்தில் மாங்கல்யம் என்ற மலர் மலர்ந்து விடும். அந்த மலர் வாடிவிடாமல் என்றும் மனம் வீசிக்கொண்டே இருக்கவேண்டுமென இறைவனிடம் பிரார்த்தித்துகொண்டாள் சுமி. ஒரு மணி நேரத்தில் “ஒருவருக்கு” சொந்தமாகிவிடும் நளினி நாளை இந்த நேரத்தில் “அந்த ஒருவரின்” வீட்டில் இருப்பாள். அதன்பின்பு சுமிக்கு இந்த வீட்டில், ஏன், இந்த உலகத்திலேயே “அன்பு” என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாது. தெரியாமல் போய்விடும்.

இதோ! நளினி வருகிறாள். கழுத்து நிறைய நகைகளும் பட்டு சேலையும் மின்ன அவள் வருவது அழகுக்கே சவால் விடுவது போல் இருந்தது சுமிக்கு.

“சுமி” என்றபடி நளினி ஓடி வந்து சுமியை தழுவிகொண்டாள்.

ஓ! நாளையிலிருந்து இவள் அன்பில் திளைக்க  முடியாது. இன்று மட்டும்தான்! இனி எப்போதோ? சுமியின் கண்கள் மழை மேகங்களாக மாறுகின்றது.

“நளி, என்ன இது? அங்கே உன்னை எல்லோரும் தேட போறா, நீ இங்க வந்து உக்காந்திருக்கியேமா..”

“சுமி, பிறந்ததிலிருந்து என்னோட சந்தோஷத்திலும் துக்கத்திலும் பங்கெடுதுகிட்ட நீ இப்ப மட்டும் வரமாட்டேங்கிறியே இது நியாயமா?” நளினி குரல் தழுதழுக்க கேட்டாள்.

“நளி இத்தன வருஷமா நீ என்ன புரிஞ்சிகிட்டது இவ்வளவுதானா? இந்த சமூகத்திலிருந்து, ஐ மீன்….இந்த ஜனங்களோட உள்ளத்திலிருந்து நான் விலக்கபட்டுடேன் நளி. இனிமே இவங்கமத்தியிலே வந்து என்னால உட்க்கார முடியாது. என்னோட வாழ்க்கைங்கிற பாலிலே இந்த ஊனமிங்கற உப்பு விழுந்துடுச்சு நளி. அது இனிமே தயிராகாவும் மோராகவும் வெண்ணையாகவும் நெய்யாகவும் மாறமுடியாது. பழைய பாலாகவும் லாயிக்கியில்லை. இப்ப புரியுதாமா நானேன் உன்னுடைய திருமணத்துக்கு வரலைன்னு” என்று கேட்டு விட்டு வ்ரக்தியுடன் சிரித்தாள் சுமி.

நளியின் கண்களில் கண்ணீர் கரைகட்டியது.

“சுமி! ஐ’ம் சாரி! நான் உன்னோட மனச புண்படுத்திட்டேன். என்ன மன்னிச்சிடு!”

“நோ நளி! நோ.. அப்படியெல்லாம் சொல்லாதே!”

“சுமி! இங்கேயே உங்கிட்டே ஆசீர்வாதம் வாங்கிக்கிறேன்” என்றபடி நளினி சுமி தடுப்பதற்குள் அவள் காலடியில் சரிந்து விட்டாள்.

பதறிபோய் அவளை தூக்கி நிறுத்திய சுமி, “நளி! உனக்கு எந்த ஒரு குறையும் வரக்கூடாது.. நீ நீடூழி வாழனும். அதோட ஒரு வேண்டுகோள் நளி! நீ எங்கே இருந்தாலும், என்னைக்கும், ஐ மீன் …… ஐ மீன் என் உடலிலிருந்து உயிர் வெளியேறும் வரை நீ என்மீது  செலுத்தும் அன்பு மாறவே கூடாது நளி” கடைசி வார்த்தைகளை தழுதழுத்தபடி கூறினாள்.

“சுமி! இதை நீ சொல்லனுமா?”

நளினா! என்ற குரல் சிவபூஜையில் கரடிபோல், அந்த அன்பு சுவரின் நடுவில் விரிசில் கண்டது போல் எழுந்தது.

“நீ இங்கேயா வந்திருக்கிற! உன்ன எங்கெல்லாம் தேடறது. மணமேடையிலே உட்காரவேண்டியவ இந்த நொண்டிகிட்டே வந்து உட்காந்திருக்கியா?” கோபமாக கேட்டாள் நளியின் தாய்.

“அம்மா” மகள் பார்வையில் தெறித்த உக்கிரத்தில் தாய் மகளை பார்த்து “வா” என்றவாறு அவ்விடத்தை விட்டு அகன்றாள்.

“சுமி! எனக்காக அம்மாவை……….”

“நளி! இந்த ஊனம் எனக்கு ஏற்பட்ட நாளிலிருந்து இந்த மாதிரி சொல்றவங்களுக்காக நீ மன்னிப்பு கேட்டுகிட்டு தான் இருக்கே.. ஆனா! என் இதயம் எல்லாத்தையும் தாங்கி தாங்கி மரத்துப்போச்சு. நீ போயிட்டுவாம்மா” என்றாள் சுமி.

கண்களை துடைத்தபடி நடந்தாள் நளினி.

ஏய்! நொண்டி கழுதை! சமையலறைக்கு வந்து கொட்டிக்கிட்டு போயேன். பெரிய மகாராணி! கையிலே கொண்டு வந்து தட்டை வைக்கனுமாக்கும்,” சித்தியின் குரல் பன்னிரண்டு மணி வெயில் மாதிரி தகித்தது.

“சொன்னாலும் சொல்லாட்டாலும் நான் மகாராணி தான். இதோபார் என்னுடைய சிம்மாசனம்.” என்று சிரித்தபடி கூறியவாறே

சக்கர நாற்காலியை தட்டி காண்பித்தாள் சுமி.

“கால் இல்லைன்னாலும் வாயாவது இருக்கே”, முகத்தை நொடித்தவாறு உள்ளே சென்றாள் அலமேலு.

எப்படி இவர்களால் இப்படியெல்லாம் பேசமுடிகிறது. இவர்களுக்கு இதயமே இல்லையா! அந்த இதயத்திலே இருக்கும் அன்பெனும் ஊற்று அடைத்துப் போய் விட்டதா? அதை எப்படி அடைத்தார்கள்!

இதயத்திலிருக்கும் காயத்தை ஆற்ற முயற்சி செய்யாவிட்டாலும் போகிறது. அதை இப்படியா கிளறி விட வேண்டும்.

“அம்மா” என்றபடி வேதனையுடன் நிமிர்ந்தாள் சுமி.

“அம்மா”… அந்த அம்மா மட்டும் இப்போது இருந்திருந்தால் சுமியின் கால்களாகவே மாறியிருப்பாள்.

அந்த பாக்கியந்தான் அவள் செய்யவில்லையே! செய்திருந்தால் ஏழாவது வயதில் பெற்ற தாயைபறிகொடுத்து விட்டு ஒரு மாத காய்ச்சலின் விளைவால் இந்த நிலைக்கு வந்து இப்படியெல்லாம் எல்லோரிடமும் பட வேண்டியதிருக்காதே. பக்கத்து வீட்டில் இருக்கும் நளினி மட்டும் சுமியின் உலகத்தில் இருந்திடாவிட்டால் அவள் இந்த உலகைவிட்டு எப்பொழுதோ சென்றிருப்பாள். பிறந்ததிலிருந்து இருவருக்குமிடையில் இறுகிய பாசம் அந்த எமனால் கூட பிரிக்கமுடியாத அளவுக்கு வளர்ந்து விட்டது.

சுமியின் தந்தையை சொல்லிக் குற்றமில்லை. மந்திரவாதியின் கையிலிருக்கும் மந்திரகோல் மாதிரி சித்தியின் கையில் அகப்பட்டுக்கொண்டு திணறுகிறார்.

பெருமூச்சுடன் சக்கரநாற்காலியை தள்ளிக் கொண்டுபோனாள் சுமி.

“அலமேலு! சுமித்ராவுக்கும் கல்யாணத்தை எப்போ நடத்த போறே?” வாசலில் எதிர் வீட்டுகாரி சித்தியிடம் அக்கறையுடன் விசாரிப்பது துல்லியமாக சுமியின் காதில் விழுந்தது.

“ஆமாம்! அதுஒன்னுதான் அவளுக்கு கொறைச்சல்! எவன் வந்து இந்த நொண்டியை கட்டிக்கப் போறான்?”

ஊசியால் குத்துவது போன்ற உணர்ச்சி ஏற்ப்பட்டது சுமிக்கு.

மறுநிமிடம் சற்று வாய்விட்டு சிரித்துகொண்டாள் சுமி. நொண்டி,.. நொண்டி, நொண்டி.. ஒவ்வொரு வார்த்தை பேசும் போதும் இந்த வார்த்தையையும் உபயோகிக்க தவறுவதில்லை சித்தி. சொல்லிவிட்டு போகட்டுமே! இல்லாததையா சொல்லுகிறாள்? உண்மையை தானே சொல்லுகிறாள் உண்மைக்கு ஏன் வருத்தப்படவேண்டும்.

காலமும், இளமையும் போட்டி போட்டுகொண்டு பறந்தது. காலம் சுமியின் தலையில் ஆங்காங்கே சில வெள்ளிகம்பிகளை உண்டாக்கி இருந்தது. இளமை அவளது அழகிய முகத்தில் சற்று முதிர்ச்சியை அளித்திருந்தது. ஆனால் அவள் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படவில்லை. கடந்த நான்கைந்து மாதங்களாக நளினியிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. அவள் திருமணமாகி சென்றதிலிருந்து சுமிக்கு வாரம் இருமுறை கடிதம் எழுதிக்கொண்டு இருந்தாள். நாளாக நாளாக அவளது கடிதம் வருவதும் அரிதாகிவிட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு சென்றதடவை அவளிடமிருந்து வந்த கடிதத்தில் அவள் தாயாகும் விபரம்குறித்து எழுதி இருந்தது சுமிக்கு மிகவும் சந்தோஷத்தை தந்தது. திருமணத்திற்கு பின் நீண்ட வருடங்கள் கழித்து அவள் தாயாகும் பேறு பெற்றிருப்பதால் அவளின் நலம் குறித்து சுமியும் அடிக்கடி விசாரித்து வந்தாள். ஆனால் தற்சமையம் அவளிடம் இருந்து எந்த தகவலும் இல்லாததாலும், அவளைப்பற்றி விசாரித்துக்கொள்ள இயலாமல் அருகிலிருந்த அவளது பெற்றோர்களும் வேற ஊருக்கு குடிபெயர்ந்து விட்டதாலும்,  வேறு எவரிடமும் எதுவும் கேட்கமுடியாமல் தோழியின் நினைவை மௌனத்திலேயே கரைத்து வந்தாள் சுமி.

வாசல் கதவை தட்டும் ஓசை கேட்டது.

“வெளியில் சென்றிருந்த சித்திதான் வந்துவிட்டாளோ?”

சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போய் கதவை திறந்தாள் சுமி.

உள்ளே நுழைந்த நளினியின் கணவன் மகேந்திரனை பார்த்து திகைத்து போனாள், சுமி.

“வாருங்கள், எதிர்பார்க்கவே இல்லை.. நலந்தானே? அமருங்கள்.. வார்த்தைகள் சமந்தமில்லாமல் குளறி குளறி வெளிவந்தன சுமிக்கு.

“என் நளி சௌக்கியந்தானே?”

அவன் அவளை மெளனமாக ஏறிட்டு நோக்கிய விதம் அவளை என்னமோ செய்தது.

“நளினி நம்மையெல்லாம் மோசம் பண்ணிவிட்டு நிம்மதியாக போய் சேர்ந்து விட்டாள் சுமித்ரா!”

என்ன? அதிர்ச்சியில் கண்கள் நிலைகுத்த முன்னால் சாய்ந்தவளை தாங்கி பிடித்துக் கொண்டான் மகேந்திரன்.

“சற்று அமைதிபடுத்திக் கொள் சுமி!”

திடுக்கிட்டு நிமிர்ந்து பார்த்தாள் சுமி.

“சுமி” அதேகனிவு! “அவள்மட்டுமே அழைக்கும் சொல்!” கண்ணீர் அணை உடைந்து சிதறியது.

“நீங்கள் ஏன் எனக்கு தெரியபடுத்தவேயில்லை?” விம்மலுக்கிடையிலும் கோபத்துடன் எழுந்தது சுமியின் குரல்.

“என்னை மன்னித்துவிடு சுமித்ரா! மூன்று மாததிற்கு முன்பு ஒரு புதிய ஜீவனை இந்த உலகத்திற்கு தந்துவிட்டு அவள் இந்த உலகைவிட்டு மறைந்துவிட்டாள். இறப்பதற்கு இரண்டு நாள்முன்பு இந்த கடிதத்தை என்னிடம் கொடுத்து, “என்றைக்கு உன்னிடம் இதை நான் சேர்பிக்கிறேனோ, அன்றுதான் தான் இறந்ததைபற்றியும் கூற வேண்டுமென்று நிபந்தனை போட்டாள்”. அவள் கட்டளை படிதான் என்னால் நடக்க முடிந்தது.” என்றபடி கடிதத்தை சுமியிடம் கொடுத்தான் மகேந்திரன்.

சுமியின் கைகள் கடிதத்தை பிரித்தன; கண்கள் படித்தன.

என் ஆருயிர் தோழி சுமிக்கு,

இதுவே நான் எழுதும் கடைசி கடிதமாக இருக்கலாம். ஏனோ, இந்த தடவை நான் பிழைக்கமாட்டேனென்று என் உள்ளத்தில் ஏதோ ஒன்று உணர்த்திக் கொண்டேயிருக்கிறது. என் அன்பு சுமி, என் திருமண நாளன்று நீ சொன்னது நினைவு இருக்கிறதா? என் வாழ்க்கைங்கிற பாலிலே ஊனமிங்கிற உப்புகல் விழுந்து திரிந்து போய்விட்டது. அதை இனி சாக்கடையில் தான் கொட்ட வேண்டுமென்று சொன்னாய். ஆனால் அது என் சுமியின் வாழ்க்கை. அந்த வாழ்க்கைப் பால் திரிந்து போயிருந்தாலும் சரி, அதை நான் உபயோகபடுத்திகொள்வேனே தவிர சாக்கடையில் கொட்டவிடமாட்டேன். புரியவில்லையா சுமி?

என் குழந்தைக்கு என் ஸ்தானத்தில் நீ வர வேண்டும். நீண்ட நேர விவாதத்திற்கு பின், அவரிடம் சம்மதம் வாங்கி விட்டேன். நீயும் சம்மதிப்பாய் என்று எனக்குத் தெரியும். என் தோழியை எனக்கு தெரியாதா? இதை நீ செய்தால்தான் என் ஆத்மா சாந்தியடையும்.”

இப்படிக்கு
உங்களை வானத்திலிருந்து வாழ்த்திக் கொண்டிருக்கும்,
உன் “நளி”.   

கடிதத்தை படித்துவிட்டு கதறியழுதாள் சுமி…

“சுமி! இந்த மனிதர்கள் இதயத்தில் அன்புங்கிற மலர் மலருகிறது. அந்த மலர் சில சமயங்களில் தியாக கனியாக கனிந்துவிடுகிறது. அப்படிப்பட்டவர்களில் ஒருத்தி நளி. ஆனால் ஒவ்வொருவர் மனதிலே அந்த மலர் மலராமல் வெறும் மரமாகவே மாறிடறாங்க,” குரலடைக்க கூறினான் மகேந்திரன்.

“உண்மைதான்! அன்னிக்கு ஒருநாள் நாஅவக்கிட்ட ஒருவேண்டுகோள் விடுத்தேன். இப்போ அவ ஒரு பெரிய தியாகத்தை செஞ்சிட்டு என்கிட்டேயே……. முடிக்க முடியாது விம்மினாள் சுமி.

“சுமித்ரா! அவளே போனபிறகு எனக்கு இன்னொரு கல்யாணம் அவசியமில்லை. ஆனாலும் அவளோட ஆத்ம திருப்திக்காகத்தான் சம்மதிச்சேன். அவ கட்டளைக்காகத்தான் தலை வணங்குகிறேன். நா கேக்கறேன்னு தப்பா நினைச்சுக்காதே சுமித்ரா! என்னை மணக்க உனக்கு சம்மதந்தானே!” உணர்ச்சியற்ற குரலில் கேட்டு கொண்டே அவள் எதிரே தன் கரத்தை நீட்டினான் மகேந்திரன்.

அவன் கண்களில் தெரிந்த வெறுமை அவன் சொன்னது உண்மை என நம்ப வைத்தது அவனை.

“என் நளினியின் திருபதிக்காக நான் என் உயிரையும் கொடுக்க தயாராக இருக்கேன்” என்ற சுமி தன் சம்மதத்தை தெரிவிக்கும் பாவனையில் அவன் கைகளில் தன் கையை பதித்தாள்.

அங்கே அன்பு மலர் மலர்வது கண்டு மேலேயிருந்து அந்த தியாகக்கனி நிறைவுடன் சிரித்தது.

Advertisements
This entry was posted in 1976-ம் ஆண்டில் எழுதியவை, கதைகள், Story and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s