கன்னி, ஆனால் தாய்.

ன்னை ஏன் காப்பாற்றினீர்கள்?” அவள் விம்மினாள்.
“என் நிலையில் யார் இருந்தாலும் அதைத்தான் செய்திருப்பார்கள். தவிர, இன்னும் சில மாதங்களில் இந்த உலகைக்காண ஆவலோடு இருக்கும் ஒரு ஜீவனைக்கொல்ல உனக்கு என்ன உரிமை இருக்கிறது”, அமைதியாக கேட்டாள் நிர்மலா.
“அவமான சின்னத்தை சுமந்து கொண்டிருக்கும் என்னால் உங்களுக்கு ஏன் அவப் பெயர் வரவேண்டும், அதனால்தான் கேட்கிறேன், இந்த அநாதையை என்னை ஏன் காப்பாற்றினீர்கள் என்று?”, அவள் கலங்கிய குரலில் கேட்டாள்.

“உன் பெயர் என்ன?”, என்று  கேட்டாள் நிர்மலா.
“நளினா”, முணுமுணுப்பாக பதில் வந்தது அவளிடமிருந்து.
“இதோ பார் நளினா!, அநாதைகளுக்கு அநாதைதான் இடம் தரவேண்டும், இதோ பார் நானும் ஒரு அநாதைதான், முப்பது வருடங்களை மலை போல் முழுங்கி விட்டு ஒரு தைரியமான பெண்ணாய் நிற்கவில்லையா! இந்த உலகில் தனியே வாழ்க்கையை அமைத்து கொண்டவர்களுக்கு தைரியந்தான் தேவை.. அதுசரி, நீ இந்த நிலைமைக்கு வர காரணம் என்னம்மா?” பரிவுடன் அவள் தலையை தடவி விட்டவாறு கேட்டாள் நிர்மலா.
“தயவு செய்து அதை மட்டும் இப்போது கேட்காதீர்கள், உங்கள் பரிவான பேச்சினால் என் மனதிலுள்ள காயம் சற்று ஆறிப்போயிருக்கிறது. அதை மீண்டும் கிளறி விடாதீர்கள்”, என்று விம்மினாள் நளினா.
“ஸாரி நளினா,  இனிமேல் நீ என் உடன் பிறவா சகோதரி உனக்கு எப்போது உன் கதையை சொல்ல தோணுகிறதோ அப்போது ௬றலாம், நான் உன்னை வறுப்புறுத்த மாட்டேன். நீ இங்கு என்னுடன் தைரியமாக தங்கலாம், இது இனி உன்னுடைய வீடு மாதிரி நினைத்து கொள். நான் உன்னை என் காலம் உள்ள வரை காப்பாற்றுவேன், கவலைபடாதே!” என்று உருக்கமான குரலில் ௬றிய நிர்மலா அவளை அன்போடு கட்டியணைத்துக் கொண்டாள். “நளினா, உன் கனவில் ௬ட இனி தற்கொலை எண்ணம் வரக்௬டாது, தெரிகிறதா?” அன்புடன் ௬றியபடி லேசாக அவள் கண்ணத்தை தட்டினாள் நிர்மலா.
சரி, என்கிற மாதிரி இருந்தது நளினாவின் தலையசைப்பு…..
“குட் கேர்ள்” பாராட்டி விட்டு அவ்வறையை விட்டு அகன்றாள் நிர்மலா..
சோம்பல் ஒன்றை விடுத்தபடி படுக்கையிலிருந்து எழுந்தாள் நிர்மலா. தினமும் கண்விழித்தவுடன் காப்பியுடன் நிற்கும் நளினாவை  காணவில்லை. நளினா அவளுடன் தங்கியிருக்க சம்மதித்தது நிர்மலாவுக்கு சந்தோஷத்தை தந்தது அவள் ௬றியபடி உடன்பிறந்த தங்கையை விட ஒருபடி மேலாகவே நளினாவை கவனித்துக் கொண்டாள். ஐந்தாறு மாதங்களில் ஒரு பெண் குழந்தைக்கு தாயான நளினா, நி்ர்மலாவின் அன்பான அரவணைப்பில் நலம் பெற்று, தன்வாழ்க்கையில் ஒரு மாற்றம் ஏற்படுத்திய நிர்மலாவிடம் அளவு கடந்த அன்பை பொழிந்து அவளை தன் தெய்வமாகவே கருதி வாழ்ந்து வந்தாள். நிர்மலா எவ்வளவோ தடுத்தும் வீட்டு வேலைகளை அவளே பொறுப்பெடுத்து ஏற்றுக்கொண்டு நிர்மலாவையும், குழந்தையையும், நன்றாக கவனித்து வந்தாள்.
வழக்கப்படி இன்று கண் விழித்ததும் நளினாவை காணாததால்,  “பாவம்! வேலை மிகுதியில் இன்று கண் அசந்து உறங்குகிறாள் போலிருக்கிறது, இன்று நாம் காப்பியுடன் அவளை எழுப்பலாம்” என்று எண்ணியபடி எழுந்து பல் துலக்கி சமையலறைக்குள் நுழைந்தாள்.
பாலைக்காய்ச்சி காப்பியை கலந்து தனக்கும் நளினாவுக்குமாக கோப்பையில் ஊற்றியவள் தன்னுடைய கோப்பையை எடுத்து காப்பியை குடிக்க  ஆரம்பித்தாள் சில மாதங்களாக  தினமும் நளினா தயாரித்த காப்பியை குடித்த நாக்கு, இன்று சற்று வேறுபட்ட சுவைக்கு குறை௯ற, மனதுக்குள் சிரித்துக் கொண்டாள்.
“என்ன இது! எவ்வளவு அயர்ந்து உறங்கினாலும் சிறிய சப்தத்திற்கு எழுந்து விடும் நளினா இன்னமும் எழுந்து வரவில்லையே? ஒருவேளை உடம்பு சரியில்லையோ?” இந்த எண்ணம் வந்ததும் மடமடவென்று நளினாவின் அறைக்கு ஒடினாள் நிர்மலா. கட்டிலில் நளினாவை காணவில்லை, அருகிலிருந்த மரத்தொட்டிலில் ஐந்து மாதகுழந்தை ஷீலா புன்னகையுடன் உறங்கி கொண்டிருந்தாள். “ஒருவேளை வீட்டின் பின்பக்கம் போயிருக்கிறாளோ?” பதட்டத்துடன் வீடு முழுவதும் தேடினாள் நிர்மலா. நளினாவை எங்கும் காணவில்லை. திகில் மின்னலென பாய்ந்தது நிர்மலாவின் உள்ளத்தில்… மறுபடியும் நளினாவின் அறைக்கு ஒடினாள் சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டியபோது  தொட்டில் அருகில் இருந்த டேபிளில் கடிதம் ஒன்று மேலே பாரத்தை தாங்கி கொண்டு அமர்ந்திருந்தது.
பரபரப்புடன் அதை எடுத்து படித்தாள் நிர்மலா.
ன்பும், பாசமும், மிகுந்த என் உயிரினும் மேலான அக்காவுக்கு, எத்தனையோ நாட்களாக என்னைப் பற்றி உங்களிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்திருக்கிறேன், ஏதோ ஒன்று என்னை சொல்ல விடாமல் தடுத்துக் கொண்டேயிருந்தது. ஆனால் அக்கா இன்றுதான் அதற்கான சந்தர்ப்பம் வந்திருக்கிறது என்று நினைக்கிறேன்.

நான் கல்லூரியில் கால் பதித்த நா ட்கள். தோழிகளுடன் படிப்பும் நட்புமாக  நன்றாகத்தான் நகர்ந்து கொண்டிருந்தது வாழ்க்கை. என் போதாத நேரம், நெருங்கிய தோழிகளுடன், ஒரு தோழி வீட்டில் தங்கி வரும் தேர்வுகளுக்கு  தயார் செய்துகொண்டிருந்தோம். அப்போது அந்த தோழி வீட்டின் எதிர் வீட்டின்  மாடியில் குடியிருந்த வாலிபன் ஒருவனிடம் சாதரணமாக தொடங்கிய நட்பு என் வாழ்க்கையை பாழாக்கியது. தேர்வுகள் முடிந்தவுடன் என் வீட்டில் எங்கள்  உறவுக்கார பையன் ஒருவனுடன் என் திருமணம் பற்றி பேச்சு வந்ததும் நான் அதிர்ந்து போனேன். என் திருமணத்தை நிறுத்த நான் செய்த முயற்சிகள்  வீணாயின. என் நிலைமை பற்றி அவனிடம் விவாதித்த போது நாங்கள் இருவரும்  ஒருவரையொருவர் நேசிப்பதை உணர்ந்தோம். “நான்  உன்னை ராணிமாதிரி வைத்து  காப்பாற்றுகிறேன்” என்று அவன் செய்து கொடுத்த சத்தியத்தை நம்பி, பத்து மாதம் சுமந்து பெற்று அத்தனை தூரத்துக்கு ஆளாக்கிய பெற்றோர்களை உதாசீனபடுத்தி விட்டு, அவனுடன் புறப்பட்டு விட்டேன். இரண்டு மாதங்கள் மனம் போனபடி சுற்றி விட்டு, இங்கு வந்தபின் அவன் நண்பன் அறையில் ஒண்டி கொண்டு வாழ்க்கை பயணத்தை துவக்கிய போது திருமணத்தின் அவசியத்தை அவனிடம் அடிக்கடி உணர்த்தி கொண்டே இருந்தேன். அவனும் இன்று, நாளை,.. என நாட்களை தள்ளியதில் மாதங்கள் ஒடியது.
ஓரு நாள் என் வயிற்றில் அவன் குழந்தையை நான் சுமப்பதை தெரிவித்ததும் திகைத்து போய், “திருமண ஏற்பாட்டை விரைவில் செய்து விட்டு வருகிறேன்” என்று போனவன், நாட்கள் பல ஓடியும் திரும்பவில்லை. கண்ணீருடன் இன்னும் சில வாரங்களை தள்ளிய போதும் அவன் வந்தபாடில்லை. முதலில் ஆறதல் ௬றி என்னை தேற்றி வந்த அவன் நண்பனின் போக்கும் வரவர மாறியது. “இவளை என் தலையில் கட்டி விட்டு அவன் தப்பித்து விட்டான், என்ன செய்வதென்று தெரியவில்லை” என்று தன்னுடைய மற்றொரு  நண்பனிடம் புலம்புவதையும், அதற்கு அந்த மற்றொருவன் கொடுத்த மோசமான யோஜனைகளையும், நான் கேட்க நேர்ந்ததால் என்னை அவர்கள் இல்லாத நேரம்  பார்த்து அங்கிருந்து தப்பிக்க வைத்தது. பெற்றவர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டதற்க்காக ஆண்டவன் சரியான தண்டனை கொடுத்து விட்டான் என்று எண்ணிய வருத்தத்தில் மனம் பாறையாய் கணக்க, வாழ பிடிக்காமல் சாகத்துணிந்தேன். அப்போதுதான் நீங்கள் வந்து காப்பாற்றினீர்கள். தாய் தந்தையை இழந்த நிலையிலும் நீங்கள் தவறான வாழ்க்கையை தேர்ந்தெடுக்காமல், நேர்மையான முறையில் வாழ்ந்து வரும் உங்களிடம் என் அவல வாழ்க்கையை சொல்ல மனம் வராமல் இதுநாள் வரை சொல்லாமல் இருந்தமைக்கு என்னை மன்னித்து விடுங்கள்.
உண்மையிலேயே, உங்களை மாதிரி நல்ல மனது உள்ளவர்களை நான் இதுவரை சந்தித்ததே இல்லையக்கா… நம் முதல் சந்திப்பில் நீங்கள் என்னைப் பற்றி விசாரித்த போது, “அதை இப்போது கேட்காதீர்கள்”, என்று நான் கேட்டுகொண்டதற்காக நீங்கள் இதுநாள் வரை என்னை பற்றி ஒரு வார்த்தை கேட்காமல், என்னை உங்கள் உடன்பிறந்த தங்கையாகவே நினைத்து என்னையும்,  என் குழந்தையையும், எப்படியெல்லாம் பார்த்து, பார்த்து கவனித்து கொண்டீர்கள். அதற்கு நான் இந்த பிறவியில்  மட்டுமல்லாது இனி எடுக்கும் எத்தனை பிறவிகளில் நன்றிக்கடன் படபோகிறேன்று எனக்கு  தெரியாது. ஆனால் இனி வரும் ஒவ்வொரு பிறவிகளிலும் உங்களுடன் இணைந்திருக்கும் உறவு வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டிக்கொள்கிறேன். இனி நான் போகும் பாதையில் உங்களை மாதிரி நல்லவர்களை சந்திக்க வேண்டுமென்றும், பிரார்த்தித்து கொண்டும் போகிறேன்.
போகிறேன் என்றதும் முன்பு மாதிரி முட்டாள்தனமான முடிவை நான் எடுத்து விடுவேனோ…. என்று நீங்கள் கலங்க வேண்டாம். உங்களிடம் பழகிய நாட்களில் உங்களது தைரியத்தை பார்த்து வியந்திருக்கிறேன்… அந்த தைரியத்தையும், தன்னம்பிக்கையையும், மூலதனமாக வைத்துக்கொண்டு, நான் படித்த கல்வியறிவின் மூலம் ஒரு நல்ல நிலைமைக்கு வந்து உங்களை மாதிரி தைரியமான திறமையான பெண்ணாக உங்களை சந்திப்பேன் என்ற நம்பிக்கையுடன் இங்கிருந்து போகிறேன், என் வாழ்நாள் முழுக்க உங்களுக்கு பாரமாக இருக்க விருப்பமில்லாததால் இந்த முடிவை உங்களை கேட்காமல் எடுத்திருக்கிறேன்.. என் முடிவு உங்களுக்கு தவறாக பட்டால் தயை ௬ர்ந்து என்னை மன்னிக்கவும். என் வயிற்றிலிருந்த பாரத்தை இறக்கி உங்கள் மேல் ஏற்றிவிட்டு செல்வதற்காக என்னை மன்னித்து விடுங்கள். குழந்தையுடன் செல்லும் என் பயணம் சிக்கலை ஏற்படுத்துமோ என்ற சிறிய பயத்தில் உங்களை சிரமத்தில் ஆழ்த்திவிட்டுச்செல்கிறேன். என்னை விட நீங்கள் அக்கரையுடன் குழந்தையை பார்த்துக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கையும் எனக்கு உண்டு. நான் நினைத்த மாதிரி ஒரு நல்ல நிலைமையில் உங்களையும், என் குழந்தையையும், சந்திக்கும் போது,  கன்னியாய் இருக்கும்போதே, ஒரு தாயாயிருந்து ஒரு குழந்தையை வளர்த்த சிரமத்திற்க்காக உங்கள் காலில் விழுந்து கதறி அழுது மன்னிப்பு கேட்பேன்.. அந்த நாளை விரைவில் தர வேண்டுமென்று இறைவனிடம் வேண்டிக்கொண்டு உங்களிடமிருந்து விடை பெறுகிறேன்”.

இப்படிக்கு
உங்களை எந்த நிமிடமும் மறவா,
உங்கள் அன்புத்தங்கை,
நளினா.

தொட்டிலில் தூங்கி கொண்டிருந்த குழந்தை தீடிரென்று வீறிட்டு அழுதது. எதற்குமே கலங்காத நிர்மலா நளினாவின் சோகத்தை சுமந்த பாரத்தில் சற்று கண்கள் கலங்க அவசரமாக குழந்தையை எடுத்து மார்போடு அணைத்துக் கொண்டாள். அவள் அணைப்பில் ஆறுதல் அடைந்த குழந்தை மறுபடி கண்மூடி உறங்க ஆரம்பித்தது. கைகளில் மெய்மறந்து உறங்கி கொண்டிருந்த ஷீலாவை மெல்ல தொட்டிலில் படுக்க வைத்தாள் நிர்மலா. “இந்த குழந்தையை விட்டு செல்லவதற்கு எப்படி நளினாவுக்கு மனது வந்தது…. அவள் வாழ்க்கையை பற்றி சமயம் வரும்போது தெரிந்து கொண்டு அவள் மனதை பக்குவமாய் மாற்றி நல்லதோரு வாழ்வை அவளுக்கு ஏற்படுத்தி கொடுக்க வேண்டுமென்றுதானே நினைத்து கொண்டிருந்தேன் .பாவிப்பெண்… அதற்குள் இப்படி ஒரு முடிவு எடுத்து விட்டாளே….” நிர்மலாவின் மனம் பரிதவித்தது…

கடற்கரை …..
“சேகர்! ஏதோ முக்கியமான விஷயம் கூற வேண்டுமென்றீர்களே!” என்று கேட்டவாறு தோளிலிருந்த ஷீலாவை இறக்கி விட்டுவிட்டு அவன் அருகில் அமர்ந்தாள் நிர்மலா.
அவளை ஏறிட்டு பார்த்துவிட்டு குழந்தையை பார்த்த சேகர் “குழந்தை” என்று இழுத்தான்.
அவனது தயக்கத்தை புரிந்து கொண்ட நிர்மலா, “கவலைபடாதீர்கள்! நாம் பேசுவது அவளுக்கு ஒன்றும் புரியாது,” என்றாள் புன்னகையுடன்.
“நம் காதலைப்பற்றி என் வீட்டில் கூறினேன் நிர்மலா, கொஞ்ச நேர தயக்கத்திற்கு பின் சம்மதம் தந்து விட்டார்கள். ஆனால்…”
“ஆனால்”?
“வீட்டுக்கு மருமகள் வரும் போதே தாத்தா, பாட்டியாக அவர்களுக்கு பிடிக்கலை, அதாவது…” எப்படிசொல்வது என்று தயங்கினான் சேகர்.
“புரிகிறது, சேகர்..” அவனை கையமர்த்தினாள் நிர்மலா.
“என்னைப் பற்றி எல்லாவற்றையும் கூறிவிட்டீர்களா சேகர்? அதாவது நான் இவளுக்கு தாயாகவேண்டிய சூழ்நிலையைப்பற்றி….”
“எல்லாவற்றையும் கூறிவிட்டேன் நிர்மலா!”
சிறிது நேரம் மௌனம் நிலவியது இருவரிடமும்.

“சரி சேகர்! நான் வருகிறேன், ஷீலா பாவம் பசியோடிருக்கிறாள்!
நாளை ஒரு முடிவான பதிலை கேட்டு வந்து சொல்லுங்கள்” என்று நிர்மலா அவனிடம் விடை பெற்றுக் கொண்டு நடந்தாள்.
“நளினா வீட்டைவிட்டு போய் இரண்டு வருடங்கள் ஓடி மறைந்து விட்டது. இதுவரை அவளை சந்திக்கும் சந்தர்ப்பம் ஏற்படவில்லை. இனி எப்போதோ?
பேதைப்பெண்! என்னோடு இருந்திருந்தால் என்னக்கு பாரமாக இருக்குமென்று போய் விட்டாள். இப்போது மட்டும்… நான்கு வருடமாக நேசித்து வருபவரை திருமணம் செய்து கொள்ள முடியாமல் குறுக்கீடாக நிற்கிறதே அவள் குழந்தை.”
சட்டென்று உள்ளத்தில் உதயமான இந்த எண்ணத்தால் வெட்கினாள் நிர்மலா.
“சே! என்னமடத்தனம்: பிஞ்சுபோன்ற முகம், மலரைப் போன்ற மென்மையான இதயம், தன்னையே தாயென்று நினைத்து அன்பு முழுவதையும் தனக்கே வாரி வழங்கும் இந்த குழந்தை, இவளைப் போயா குறுக்கீடு என்று நினைத்தோம்!”
சாட்டையால் அடித்தது போல் வலித்தது இதயம். கண்களில் நீர் நிரண்டது. தன் பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த குழந்தையை இழுத்து அன்புடன் அனைத்துக் கொண்டாள் நிர்மலா.
“யாராலும் என்னை இவளிடமிருந்து பிரிக்க முடியாது என்றுமே.. என் வாழ்நாள் உள்ளளவும் நான் தான் இவளுக்கு தாய்” என்று தனுக்குள் முணுமுணுத்துக்கொண்டாள் நிர்மலா.

ரு  வாரகாலம் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் கழிந்தது. வார இறுதியில் மறுபடியும் அதே கடற்கரையில் சேகருக்காக காத்திருந்தாள் நிர்மலா. குழந்தை அவள் அருகே மணலில் விளையாடிக்கொண்டிருந்தது.
தூரத்தில் அவளை தேடிக்கொண்டு சேகர் வந்து கொண்டிருப்பதை கண்ட நிர்மலா கையசைத்து தான் இருக்குமிடத்தை அவனுக்கு உணர்த்தினாள். அவளை பார்த்த மகிழ்ச்சியில் அவள் அருகில் வந்தமர்ந்தான் சேகர்.
“சேகர், உங்கள் பெற்றோர்களின் முடிவான பதிலை கேட்டு விட்டீர்களா? என்ன சொல்கிறார்கள்?” என்று ஆர்வமான குரலில் நேரடியாக ஆரம்பித்தாள் நிர்மலா.
“கேட்பதென்ன, கெஞ்சி பார்த்துவிட்டேன் நிர்மலா.. அவர்கள் முடிவிலிருந்து விலக மறுக்கிறார்கள்.” தயக்கமான குரலில் சேகர் ௬றினான்.

“சேகர், உங்கள் பதில்?  நீங்களுமா என்னை சந்தேகிக்கிறீர்கள்?” சற்று தழுதழுத்த குரலில் கேட்டாள் நிர்மலா.
“சே! சே! சத்தியமாக இல்லை நிர்மலா, இந்த நான்காண்டுகால பழக்கத்தில் உன்னைப்பற்றி எனக்குதெரியாதா, நளினாவை நான் பார்த்து பேசாவிட்டாலும் நீ அவளைப்பற்றி சொன்னதையெல்லாம் கேட்டு உன்னுடன் நானும் அவளுக்காக இரக்கபடவில்லையா, அவளுக்கு ஒரு புதுவாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து விட்டு, அதற்கு பிறகு நம் காதலை அவளிடம் சொல்லி நாம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நீ சொன்னதை ஆமோதித்து, நான் இத்தனை காலம் காத்திருக்கவில்லையா, இருந்தாலும்….. நீ….” தயக்கத்துடன் நிறுத்தினான் சேகர்.
“சொல்லுங்கள் சேகர், எதையோ சொல்ல வந்தீர்களே..” என்ற நிர்மலா அவன் கண்களை உற்றுநோக்கினாள்.
“நீ தவறாக நினைக்காதே, நிர்மலா. என்  பெற்றோர்கள் மட்டுமில்லை, நானும்…. என் மனைவி ஒரு குழந்தையோடு வருவதை விரும்பவில்லை….” சற்று படபடத்த குரலில் ௬றினான் சேகர்.
திடுக்கிட்டு அவனை நிமிர்ந்து பார்த்தாள் நிர்மலா.
“ஒரு அருமையான யோஜனை ௬றுகிறேன் நிர்மலா, பேசாமல் ஷீலாவை அநாதை ஆசிரமத்தில் சேர்த்து விடு. அதற்கு வேண்டிய உதவிகளை நான் செய்கிறேன். நம் திருமணத்திற்கு பிறகும், நீ அவளை அடிக்கடி சென்று பார்த்து விட்டு வரலாம். அதற்கு நான் தடையொன்றும் சொல்ல மாட்டேன். இது உறுதி! என் பெற்றோர்களிடமும் இந்த விபரத்தை விளக்கி ௬றி, அவர்கள் சம்மதத்தையும் வாங்கி விடுகிறேன்… என்ன சொல்கிறாய்?” அவனது அவசர பேச்சில் அவளை எப்படியாவது திருமணம் செய்து கொள்ள வேண்டுமென்ற வெறி மட்டுமே இருப்பதை புரிந்து கொண்டாள் நிர்மலா.
சிறிது நேரம் மெளனம் நீடித்தது இருவரிடமும்…
எதுவும் உணராத குழந்தை இருவரையும் பார்த்து தன் மழலை மொழியில் எதையோ ௬றிவிட்டு, முகம் மலர சிரித்து விட்டு, நிர்மலாவின் மடியில் ஏறி அமர்ந்து அவள் கழுத்தை இறுககட்டிக்கொண்டது.
நிர்மலாவும் அவளை அன்புடன் அணைத்து அவள் கன்னத்தில் முத்தமிட்டாள்.
சட்டென்று உறுதியான முகத்துடன் அவ்விடத்திலிருந்து எழுந்த நிர்மலா, தன் புடவையில் ஒட்டிக்கொண்டிருந்த மணலை தட்டியவாறு மடியிலிருந்து இறக்கி விட்ட குழந்தையை எடுத்து தோளில் சாற்றிக் கொண்டாள்.
“மிஸ்டர் சேகர், சாதாரணமான மனிதர்கள் கணக்கில் இத்தனை சீக்கிரம் நீங்கள் சேர்ந்து விடுவீர்களென்று நான் கனவிலும் நினைக்கவில்லை. உங்களை எவ்வளவோ உயர்ந்த மனிதர் என்றுதான் இதுநாள் வரையில் நினைத்திருந்தேன்.
என்னையே நம்பி என்னிடம் ஒப்படைத்து விட்டு போயிருக்கும் நளினாவின் குழந்தையை, என் அன்பு சகோதரி குழந்தையை, ஏன்…. நான பெறாமல் வளர்த்து வரும் என் வளர்ப்பு மகளை நான் உங்கள் அரிய யோஜனையின்படி நான் கைவிட தயாரில்லை. அதற்காக என்னை மன்னித்து விடுங்கள். நீங்கள் உங்கள் விருப்பபடி உங்கள் பெற்றோர்க்கு பிடித்தமான பெண்ணை மணந்து கொள்ளுங்கள், no objection.. அல்லது.. என்னை புரிந்து கொண்டு, என்னையும், என் குழந்தையையும் ஏற்றுக்கொள்ள என்று மனமுவந்து முன்வருகிறீர்களோ, அன்று அந்த நாளில் நான் உங்களை ஏற்றுக்கொள்வேன். அதுவரைக்கும் அது எத்தனை ஆண்டு காலமானலும்சரி… காத்திருப்பேன்..  ஏனென்றால், நான் உங்களை  மனமாற நேசித்திருக்கிறேன். இப்போதும் நீங்கள் குழந்தையை அநாதையாக விட்டுவிடுமாறு சொல்லும் யோஜனையை தவிர்த்து, உங்களிடமிருக்கும் பிற நல்ல குணங்களுக்காக உங்களை நேசிக்கிறேன். தவிர என்றோ உங்களையை என் கணவராக என் மனதில்  வரித்து விட்டேன். மனதில் அமர்ந்திருக்கும் ஒருவரை தூக்கி எறிந்து விட்டு மற்றொருவரை மணந்து கொள்ள எனக்கு தெரியாது. என்னால் முடியவும் முடியாது,  நான் வருகிறேன்.”  சொற்களை சிந்திய வேகத்தில் அவனிடமிருந்து எந்த ஒரு பதிலையும் எதிர்பாராமல் வேகமாக நடந்து சென்றாள் நிர்மலா.
அவளையே திகைப்புடன் பார்த்தவாறு அமர்ந்திருந்தான் சேகர்…..

Advertisements
This entry was posted in 1976-ம் ஆண்டில் எழுதியவை, கதைகள், Story and tagged , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s