மனசு

 

 

அந்த வீட்டின் முற்றத்தில் முருங்கை மரத்தில் அமர்ந்திருந்த அந்த காகம் கரைந்தது. உள்ளேயிருந்து முற்றத்திற்கு வந்த முதியவர் ஓருவர் கரைந்து கொண்டிருந்த அந்த காகத்தை அண்ணாந்து பார்த்தார்.  “ஏன் இப்படி காலையிருந்து கத்தி கொண்டேயிருக்கிறாய்?” யாராவது வரப்போகிறார்களா என்ன? என்று கேட்டபடி கீழேயிருந்து கல் எடுத்து எறியும் பாவனையில் ஓரு முறை கீழே குனிந்து நிமிர்ந்து கையை ஆட்டியபடி “சூ” “சூ” என்றபடி அதை விரட்டினார். அந்த காக்கையும் அவருக்கு பயந்தது போல் அமர்ந்திருந்த அந்த கிளையிலிருந்து பறந்து மறுபடி வேறொரு கிளையில் போய் அமர்ந்து கொண்டது. “அப்படி யராவது வந்தாலும் பரவாயில்லை நாலு சுவத்தை பாத்துட்டு பொழுது போகமே தவிக்கிறதுக்கு நாலு நாள் பொழுதாவது நல்லாபோகும்” என்று முணுமுணுத்த அந்த முதியவர் தன்னுடைய மிரட்டலுக்கு காகம் கட்டுபட்டு விட்டது என்ற திருப்தியுடன் உள்ளே சென்றார்.

சிறிது நேர அமைதிக்குப்பின் மறுபடியும் அந்த காகம் கரைய ஆரம்பித்தது. அதன் ஓயாத கரைதலுக்கு செவிமடுத்து வீட்டின் உள்ளிருந்து ஒரு மூதாட்டி வெளிவந்து கண்ணை இடுக்கியபடி மரத்திலிருந்த அந்த காக்கையை உற்று நோக்கினாள். “ஏன் இப்படி காலையிலிருந்து கத்திகிட்டேயிருக்கு? காக்கா ஒயாம கத்தினா யாராவது வருவாங்கனு சொல்வாங்க, அப்படி யார் வரப்போறாங்க? பக்கத்து ஊரிலிருக்கும் என் தங்கையை பார்த்தே ரொம்ப நாளாகி விட்டது. என்னாலேயும் முந்தி மாதிரி துணையில்லாமே தனியா எங்கேயும் போக முடியலே அவளாவது வந்தா நல்லாயிருக்கும்!” என்று புலம்பியவாறு கீழே கிடந்த ஒரு கம்பை எடுத்து உயா்த்தி பிடித்து  “சூ” கத்தாதே! என்று சத்தமிட்டபடி கம்பை மரத்தில் அமர்ந்திருக்கும் காக்கையை பார்த்து எறிந்தாள். காக்கையும் கம்புக்கு பயந்து வேறு கிளை மாறி அமர்ந்து கொண்டது. அது கத்துவதை நிறுத்திவிட்ட சந்தோஷத்தில் அவளும் உள்ளேசென்றாள்.

சிறிய நிசப்ததிற்குப்பின் மறுபடியும் அந்தகாகம் கரைய ஆரம்பித்தது. முற்றத்தில் ஏதோ காயவைப்பதற்காக துணியும் பாத்திரமுமாக உள்ளேயிருந்து வெளிப்பட்ட அந்த நடுத்தரவயது மாது கையிலிருப்பதை கீழேவைத்துவிட்டு மரத்திலிருந்த காக்கையை அண்ணாந்து பார்த்தாள். “சனியன்! காலையிலிருந்து கத்திட்டேயிருக்கு, யார் வரப்போகிறார்களோ? உள்ள செலவு பத்தாதென்று, ஏற்கனவே இந்தமாதம் ஊரிலிருக்கும் இரண்டாவது மகன் பணம் அனுப்பவில்லை.. ஒரே மகள் பிரசவத்திற்காக வேறு வந்திருக்கிறாள்.. வயதான மாமனார் மாமியாரையும் கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயம்.. எல்லா செலவுகளையும் கணவரின் குறைந்த சம்பளத்திலும், பெரியவன் கொடுக்கும் பணத்திலேயும் சமாளித்துக் கொள்ளவேண்டும்.. இந்த லட்சணத்தில் விருந்தாளி ஒருகேடா”, என்று முணுமுணுத்தவள் காக்கையை கோபத்துடன் முறைத்தாள். “ஒருவேளை ஊரிலிருக்கும் மகன் பணத்தை அனுப்பியதற்கு அறிகுறியாக இந்த காக்கை இப்படி விடாது கரைகிறதோ?” என்று நினைத்த மாத்திரத்தில் கோபம் சற்றுகுறைந்து சிறிது நிம்மதி எட்டிப்பார்த்தது. இருப்பினும், கையுடன் கொண்டுவந்திருக்கும் அரிசியை மரக்கிளையில் அமா்ந்துகொண்டு கத்திக்கொண்டேயிருக்கும் இந்த காக்கையை நம்பி எப்படி காயவைத்து விட்டுச்செல்வது? என்று யோசித்து கொண்டிருந்தவள் அந்த பக்கமாகவந்த தன்மகளை பார்த்ததும் சற்றுபூரிப்புடன் “வா, சுசீ.. இதை உலரவைத்து விட்டுசெல்கிறேன் காக்கா வந்து கொத்தாமல் பார்த்து கொள்கிறாயா?” என்ற வண்ணம் அரிசியை துணியை விரித்து காயவைத்து விட்டு உள்ளேசென்றாள்.

காகம் கிளை மாறிமாறி அமா்ந்து சத்தத்துடன் கரைந்தது. சுசீலா மேலே பார்த்துவிட்டு கிழேகிடந்த கம்பை கையிலெடுத்து கொண்டு காக்கையை விரட்டும் பாவனையில் கம்பைஆட்டிக்கொண்டே துவைக்கும் கல்லில்போய் அமா்ந்துகொண்டாள். “இந்த காக்கா இன்று ஏன் இப்படி கத்திகொண்டேயிருக்கு? ஒருவேளை இந்தமாதம் வரமாட்டேன் என்று சொல்லிச்சென்ற தன் கணவன் திடும் மென்று சா்ப்பிரைசாக இருக்கட்டும் என்று வரப்போகிறரோ?” என்று நினைத்துக்கொண்டவள் அந்த மகிழ்ச்சியில் மூழ்கி போனாள்.

அந்த காகம் விட்டு விட்டு கரைந்து கொண்டேயிருந்தது. உள்ளேயிருந்து ஒடிவந்த குழந்தையின் பின்னால் சத்தமிட்டபடி அந்த வீட்டின் மருமகள் அந்த குழந்தைக்கு சாதம் ஊட்டுவதற்காக கையில் சாத தட்டுடன் வெளிப்பட்டாள். கண்மூடி அமா்ந்திருந்த சுசீலாவின் நிலை கண்டதும் குறும்புடன் அவள் கண்ணத்தை நிமிண்டியவள் “ஏய்! என்ன கனவு காண்கிறாயா? கனவில் யார்?” என்று கேலியாக கேட்கவும் சுசீலாவின் முகம் சிவந்தது.

“ஒன்றுமில்லை அண்ணி.. இந்தஅரிசி கொஞ்ச நேரம் காயறவரைக்கும் அம்மா பாத்துக்க சொன்னாங்க” என்று இழுத்தாள்..

“சரி சரி.. குழந்தைக்கு சாதம் கொடுத்திட்டு நான் அதை எடுத்துகிட்டு வரேன் நீ உள்ளே போ வெயிலில் இருக்காதே” என்று அன்போடு ௬றி அவளை அனுப்பியவள் குழந்தைக்கு சாப்பாடு கொடுக்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் ஒழுங்காக சாப்பிட்ட அந்த குழந்தை சாப்பிட அடம்பிடிக்க ஆரம்பித்தது. “சாப்புடுகண்ணு நீ சாப்பிடாட்டி அந்த காக்கா வந்து உன் சாதத்தையெல்லாம் சாப்புட்டு போயிடும். அப்பறம், இந்த அனுக்குட்டிக்கு ஒண்ணும்கிடையாது ஒருவாய் வாங்கிக்கோடா செல்லம்”. தாயின் கொஞ்சலிலும் கெஞ்சலிலும் சிறிது சாப்பாடு உள்ளே சென்றது. “அம்மா! காக்காவுக்கும் பசியா?” குழந்தை மரத்திலிருந்த காக்காவை பார்த்தபடி மழலையில் கேட்டது. “ஆமாம், நீ சீக்கரம் சாப்பிடு! இல்லைனா காக்காவுக்கே அத்தனையும் போடப்போறேன்.” மிரட்டலில் இரண்டுவாய் சாப்பாடு இறங்கியது. குழந்தை வீட்டிலிருந்த திண்பண்டங்களை நினைவு ௬ர்ந்து அது வேண்டுமென்று அடம்பிடித்தது. “சாப்பிட்டவுடன் தருகிறேன்” என்ற தாயின் உறுதிமொழியுடன் ஒரு வழியாக சாப்பாட்டுகடை முடிந்து குழந்தையுடனும் காயவைத்த அரிசியுடனும் அவள் உள்ளே சென்றாள்.

அந்த காகம் கிளைமாறி அமா்ந்து தன் அலகால் இறக்கைக்களை நீவி விட்டுக்கொண்டு உடலை சிலுப்பியபடி மறுபடி கரைய யத்தனித்தது. “என்ன இது! நானும் காலையிலிருந்து கத்திக்கொண்டே இருக்கிறேன்.. ஒவ்வொருவராக வந்து நான் கரைவதற்கு அவரவர் மனதிற்கு பிடித்த காரணங்களை கற்பித்துக்கொண்டு சென்றுவிட்டார்களேயன்றி, எனக்கும் பசிதாகம் என்று ஒன்று இருக்கிறது, அதற்கு நான் இவர்களை நம்பிதான் இருக்கிறேன், என்பதை மறந்து விட்டார்களே! ஒருவராவது அதைப்பற்றி சிந்திக்கவில்லையே.. மனிதநேயம் மறைந்துவருகிறதே..” என்ற ரீதியில் சென்ற காக்கையின் சிந்தனையால் அது கரைவதை நிறுத்திவிட்டு சுற்றும் முற்றும் பார்த்தபடி அமா்ந்திருந்தது.

மறுபடி வீட்டின் உள்ளேயிருந்து  அந்தக்குழந்தை திண்பண்டகள் நிரம்பிய தட்டுடன் ஒடிவந்து முற்றத்தில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தது. குழந்தையின் மனதில் காகத்தின் நினைவுவர அது மேலே நிமிர்ந்து பார்த்தது. அங்கு கரையாமல் தன்னையே பார்த்துக்கொண்டிருந்த அந்த காக்கையை பார்த்ததும், “காக்கா.. உனக்கும் பசிக்கா? இந்தா நீயும் கொஞ்சம் சமத்தா சாப்பிடு என்ன..” என்று தன் மழலை சொற்களில் மிழற்றியபடி தட்டிலிருந்த திண்பண்டகளை தன் சின்ன கைகளால் கீழே எடுத்து போட்டது. பின்பு மரத்திலிருந்த காக்கையை பார்த்து தன் சின்ன கையை ஆட்டி, “வா, வா” என்றது. காகம் சிறிது நேரம் கீழிறங்கி போகலாமா, வேண்டாமா என்று யோசித்த போது  உள்ளிருந்து அழைத்த அவள் அம்மாவின் குரலுக்கு பணிந்து “தோ வரேம்மா..” என்றபடி ஒடியது. “இந்த குழந்தைக்காவது என் பசி புரிந்ததே” என்ற சந்தோசத்தில் காகம் விர்ரென்று பறந்து வந்து, ஆவலுடன் அந்த பண்டங்களின் அருகில் அமர்ந்தது. “குழந்தைகளிடம் இன்னும் மனிதநேயம் மங்கிவிடவில்லை..” என்று நினைத்தபடி சுற்றும் முற்றும் ஒரு தடவை பார்த்துவிடடு எச்சிலூறும் தன் அலகால் அந்த திண்பண்டத்தை கொத்தியது. அப்போது உள்ளிருந்து அந்த குழந்தையின் வீறிட்ட அழுகையும், அவள் அம்மாவின் சத்தமான கத்தலும், காக்கையை மறுபடி மரத்திற்க்கே பறக்க வைத்தது.

காக்கை வாயில் உணவுடன் கீழே பார்த்தது. முற்றத்திற்கு அந்த குழந்தை சகிதம் வந்த பெண் கீழே கொட்டிகிடந்த பலகாரங்களை பார்த்ததும், “இங்கே எல்லாத்தையும் கொட்டிட்டு உள்ளை வந்து அழறியா? உன்னை உள்ளேயே வைத்து சாப்பிடசொன்னேனில்லியா? வெளியே வந்து சாப்பிட்டா காக்கா வந்து கொத்திகிட்டு போயிடுமுனு அம்மா சொன்னேனே கேட்டியா?” என்று கடிந்து கொண்டாள். குழந்தை கீழே  சிதறியிருந்த பண்டங்களை பார்த்ததும் காக்கையையின் நினைவு வந்து மேலே மரத்தை பார்த்தது. தட்டிலிருந்தை கீழே கொட்டிவிட்டதற்கு அம்மா கடிந்து கொண்டதினால் வந்த அழுகையை மறந்தவளாய், மேலே கையை காட்டி “அம்மா! அந்த காக்காக்கு பசிம்மா..  நாந்தான் சாப்பாடு போட்டேன்..” என்று சந்தோசமாக  மழலையில் சொன்னபடி கைத்தட்டி சிரித்தது. தாயின் கவனம் மரத்திலிருந்த காக்கையிடம் சென்றது. காக்கையின் அலகினிடயே இருந்த பண்டத்தை பார்த்ததும் “பாத்தியா? நீதானா! அன்னிக்கு பாட்டிகிட்டேயிருந்து வடை திருடுன கதை மாதிரி என் குழந்தைகிட்டேயிருந்து திண்பண்டங்களை திருடிகிட்டு அவளை அழ வச்சியா?” என்றுகேட்டவாறு கையை ஆட்டி காக்கையை விரட்டினாள். கதை என்றதும் எல்லாவற்றையும் மறந்து விட்டு குழந்தை “அம்மா! “காக்கா கதை” சொல்லும்மா” என்று நச்சரிக்க ஆரம்பித்தது. “நீ உள்ளே வா அப்பறம் சொல்லேறன்” என்றபடி அவள் குழந்தையை அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.

காக்கை மிரட்சியுடன் விழிகளை உருட்டி பார்த்தது. என்றோ ஒருநாள் தன் மூதாதையர் எவரோ ஒருவர் செய்த தவறை (அது கற்பனையாக ௬ட இருக்கலாம்) இன்றும் தன் குழந்தைகளுக்கு கதையாக சொல்லி மகிழ வைக்கும் மனிதர்களுடன் வாழ்ந்தாக வேண்டிய தன் நிலையை நினைத்து வருந்திய அந்த காகம், அக்குழந்தை மனமுவந்து தந்த உணவாயினும் “திருடன்” என்று அவச்சொல் ௬றி நிந்தித்த அந்த வீட்டின் உணவை உண்ண விரும்பாமல், தன் பசியை மறந்து தன் அலகிலிருந்த அந்த பண்டத்தை உமிழ்ந்துவிட்டு, மனம் நொந்தபடி பசித்த வயிறோடு, அங்கிருந்து கரைந்தபடி பறந்து சென்றது.

Advertisements
This entry was posted in கதைகள், Story and tagged , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s