நன்றி கரையல்கள்

வெயிலின் தாக்கம் மதிய நேர குட்டித்தூக்கத்தை பாதித்தது. குழந்தைகள் இல்லாததினால் வீடு வெறிச்சென்று இருந்தது என் மனதை போல.. என் மனைவியின் ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் நான் அலட்சியபடுத்தியதால் குழந்தைகளுக்கு வரிசையாக வந்த நான்கைந்து நாள் விடுமுறையை பயன்படுத்திக்கொண்டு, என்னை உதாசினபடுத்திவிட்டு,  குழந்தைகளுடன் பக்கத்து ஊரிலிருக்கும் தன் தாய் வீட்டுக்கு சென்று விட்டாள். அவளுடைய புதிய யோசனைகள் என்னை மேலும் சிரமத்திற்கு உள்ளாக்கும் என்பதை நான் எத்தனையோ முறை எடுத்துசொல்லியும், அவள் புரிந்து கொள்ள வில்லை. அவளது கோபத்திற்கு வடிகாலாக அவளுக்கு தாய் வீடு உதவுகிறது. ஆனால் அலுவலக வேலையை விட்டுவிட்டு நான் எங்கு போவது? மனதில் வேதனையை சுமந்து வாரத்தின் விடுமுறை நாளை கழித்து கொண்டிருக்கிறேன்.

உள்ளேயும் வெளியேயும் இருக்கும் புழுக்கத்தைக் குறைக்க மாலை சிறிதுநேரம் காலாற நடந்தால்தான், இரவில் நல்ல தூக்கத்தை சந்திக்க இயலும் என்பதால், வீட்டை விட்டு வெளியேறி சாலையில் நடை பயணம் தொடங்கினேன். நான் இந்த ஊருக்கு வந்த புதிதில் நிழலாக நின்றிந்த பல சாலையோர மரங்கள், சாலை விரிவாக்கதிற்காக சாவை சந்தித்தும், சந்தித்து கொண்டுமிருந்தன. விரையும் வாகன வசதிக்காக, தன் வாழ்நாளைத் தொலைத்து கொண்டிருந்ததன. மரங்களின் ஆக்கிரமிப்பை அகற்றி மக்கள் தங்கள் வாசஸ்தலத்தை விருத்தி பண்ணிக்கொண்டிருந்தார்கள். ஆங்காங்கே வானளாவிய கட்டிடங்களும் வணிக வளாகங்களும் பெருகி இருந்தது. மக்களின் வசதிக்காக சாலைகள் புனரமைக்க பட்டு இயற்கை புரையோடி போயிருந்தது.

நடந்து வலித்த பாதங்கள், இனி நாலடி கூட நகர முடியாது என்பதை உணர்த்த, பூத்துக்குலுங்கிய பூங்கா ஒன்றில் புகுந்து புல் தரையில் அமர்ந்தேன்.

“மரங்கள் மடிந்தால் என்ன! நாங்கள் இருக்கிறோம்” என்று மார்தட்டியபடி புதியதாய் உருவாக்கபட்ட அந்த பூங்காவின் புற்கள், காற்றில் சிலிர்த்தபடி கண் சிமிட்டி கொண்டிருந்தன. மாலை சூரியன் மங்கினாலும் மேகவீதியில் மறைந்து மறைந்து மேகங்களுக்கும் பொன்னிறத்தை கொடுத்தபடி மேற்க்கே மறைய தலைபட்டுகொண்டிருந்தான். வான் வெளியில் விதவிதமான பறவைகள் வட்ட மிட்டும், குறுக்கும் நெடுக்குமாகவும், பறந்துக் கொண்டிருந்தது.

“எங்களுக்கு வான்வெளியே போதும், இந்த மண்ணும் மரங்களும் அவ்வளவாக அவசியமில்லை. எங்கள்  கூர்மையான பார்வை கொண்டு அங்கிருந்தபடியே, எதையும் கண்காணிப்போம்” என்ற அலட்சியத்தோடு, கழுத்தை நிமிர்த்திக்கொண்டு, கழுகுகள் தங்கள் வாழ்நாளில் பாதியை வட்டமிட்டபடி கழித்துகொண்டிருந்தன.

மற்றும் வாலில்லா பறவைகளும், வால்நீண்ட பறவைகளும், “எங்களுக்கு மட்டும் பறக்க தெரியாதா, என்ன?” என்றபடி கூச்சலிட்டு கொண்டு அங்குமிங்கும் சென்றுகொண்டிருந்தது. காக்கைகளும், புறாக்களும், “எங்களுக்கு கீழ்நோக்கி பறக்கவும் தெரியும்” என்று நிரூபிக்க புல்தரைகளில் நடந்து காட்டி பறந்து சென்று மரமேறி, மறுபடியும் வானில் பறந்து வித்தைகள் செய்து கொண்டிருந்தன.

வானின் மற்றோரு மூலையிலிருந்து மேகங்களுடன் புறப்பட்டு கொண்டிருந்த மழை, “இவர்களது விளையாட்டுகளை ரசிக்க நானும் வரவா?” என்று கேட்டது.

“நீ வந்தால் அவ்வளவுதான்! உன்னைக் கண்டதும் இவர்கள் ஓடிவிடுவார்கள். என்னுடைய ஒளியிலும் அதன் இதத்திலும்தான் இவர்களால் உல்லாசமாக ஓடியாட முடிகிறது” என்று சூரியன் சிரித்தபடி மேகத்தினின்று வெளிப்பட்டு கூறிவிட்டு, மீண்டும் ஒரு மேகத்தின் மறைவுக்கு சென்றான்.

“அது சரி, உன்னை விட நான் ஒன்றும் குறைந்தவன் அல்ல; உன் வெப்பத்தைவிட என் குளிர்ச்சியைதான் அனைவரும் அதிகமாக விரும்புவார்கள். உன்னிடம் இருக்கும் ஒளியைவிட நான் குறைந்துவிட்டேனா! என் ஒளி கன்னைகூச செய்யும் அளவுக்கு சக்தி வாய்ந்ததாக்கும்.” என்ற படி பளிச்சென்று ஒரு மின்னலை தோற்றுவித்தது மழை மேகம்.

“நீ எவ்வளவு தான் குளிர்வித்தாலும் என் வெப்பம் இல்லாவிட்டால் எல்லோரும் தவித்து போய்விடுவார்கள் தெரியுமா? தினமும் வந்து போகும் நான் எங்கே, எப்பொழுதோ வந்து போகும் நீ எங்கே?” என்று கூச்சலிட்டபடி மேகங்களை தூர விலக்கி கொண்டு, சூரியன் ஆவேசமாக வெளிவந்து சுட்டெரித்தான்.

“போதும் உங்கள் சண்டை! யார் பெரியவன் என்ற வீண் சர்ச்சையை விடுத்து உங்கள் கடமையை செய்யுமிடம் என்னுடையது, என்பதை மறந்துவிடாமல் அவரவர் கடமையை ஒழுங்காக செய்யுங்கள்” என்று வானம் இந்த சண்டைக்கு ஒரு முற்று புள்ளி வைப்பதுபோல் ஒரு முறை உறுமியது.

ஒருபுறம் வானத்தின் வர்ணஜாலங்கள் மனதை மயக்கியபடி இருக்க, மறுபுறம் அருகிலிருந்த மரமொன்றில் அதன் அடர்த்தியான கிளையொன்றில் காக்கைகள் விடாது கரைந்து கொண்டிருந்தது. தலை திருப்பி அந்த காக்கைகளை பார்த்தபடி, புல்வெளியில் சாய்ந்து படுத்தேன். அந்த கிளையில் காக்கை கூடுகட்டி இருந்தது. கூட்டுக்குள் இருந்தபடி, இரண்டு குட்டி காக்கைகள் கரைந்து கொண்டிருந்தது. அருகில் பெரிய காகம் தன் அலகுகளால், தன்னுடைய இறக்கைகளை கோதி கொண்டும், அடிக்கடி சுற்றுமுற்றும் பார்த்துக்கொண்டும், தன் குட்டி காக்கைகளுக்கு காவலாக அமர்ந்து கொண்டிருந்தது. இரை தேடி சென்றிந்த தன் இணை பறவையை எதிர் நோக்கி அமர்ந்திருந்த அந்த காகம், பசியினால் கத்தும் தன் குட்டிகளுக்கு, அருகில் சென்று தன் அலகால் அதன் தலைகளையும் கோதி விட்டது. “தாய் வந்ததும் பசி ஆறலாம், சற்று பொறுங்கள்” என்று சொல்லாமல் சொல்லி உணர்த்திய அந்த காக்கையின் செயலுக்கு படிந்த குட்டி காக்கைகள் கண் மூடி அனுபவித்த அந்த கிறக்கம், என் மனதில் ஆழபதிந்தது. பறவைகளின் பாசபினைப்பும், நம்மைப்போல் பேசி ஆற்றிக்கொள்ள முடியாத பாச சொற்களும் என் மனதில் கற்பனையாய் விரிய கண்மூடினேன்.

தன் குழந்தைகளின் தலையை பாசத்துடன் தடவி சமாதானபடுத்திய அந்த காகம், “குழந்தைகளே! உங்கள் தாய் இரைதேட வெகுதூரம் சென்றிருக்கிறாள் போலும், அதனால் தான் நேரமாகிறது. நானும் சென்று விட்டால் உங்களை யார் கவனித்து கொள்வார்கள்? அதனால் சற்று பொறுங்கள்! தாய் வந்தவுடன் பசியாறலாம்” என்று அன்புடன் கூறிகொண்டிருந்தபோது, சாலையில் சென்ற ஓர் வாகன இரைச்சலில் பீதி அடைந்த குட்டி காக்கைகள், சிறிது வளர்ந்த இறக்கைகள் படபடக்க தந்தையின் அருகில் மேனி நடுங்க ஒட்டி கொண்டனர். “அப்பா! இவர்களுடன்தான் நான் வாழ வேண்டுமா?” என்று ஒரு குட்டி காகம் பயத்துடன் கேட்டது.

“ஆம் மகனே!, நாம் இவர்களை அண்டிதான் வாழ வேண்டும். வேறு வழியில்லை. முன்பெல்லாம் இவர்கள் கூட்டு குடும்பமாக ஒரே வீட்டில் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். நமக்கு அடைக்கலமாக அவரவர் வீட்டு கொல்லைபுறத்தில் விதவிதமாக  மரங்களை வளர்த்து, நாம் நிம்மதியாக வாழவும் வழிவகுத்து தந்திருந்தார்கள். நம்மை அவர்களின் முன்னோர்களாக மதித்து, நமக்கு தினமும் சோறிடுவது அவர்களின் வழக்கமான செயல்களில் ஒன்றாகவும் நினைத்து வாழ்ந்து வந்தார்கள். அப்போதெல்லாம் நாம் உணவுக்காக அந்தளவு அல்லல் படுவது கிடையாது. ஆனால் இப்போது, காலம் மாறி விட்டது. அவர்கள் கூட்டு குடும்பத்தை சிதைத்து, அவர்களின் வசதிக்காக நான், நீ, என்று பிரிந்து போனதில், கொல்லையும் மரங்களும் காணாமல் போனதில், என் அன்னை தந்தை காலத்திலேயே, நான், சாலையோர மரங்கள், பூங்காவின் மரங்கள் என ஊரின் எல்லைக்கு வாழவந்தாயிற்று. நம் பறவை இனங்களில் சில, இவர்களின் விஞ்ஞான முன்னேற்றதிற்கு ஈடு கொடுக்க முடியாமல், நம்மிடம்கூட சொல்லிக் கொள்ளாமல், எங்கோ வெகு தொலைவிற்கு சென்று விட்டன. நாம்தான் வேறுவழியின்றி இவர்களுடன் காலத்தை கழித்து வருகிறோம்.

“தனி ஒரு மனிதனுக்கு உணவில்லையெனில், இந்த ஜகத்தினை எரித்திடுவோம்!” என்று இவர்களின் ஒருவன் பாடினான்.
“தனித்திருக்க நமக்கோர் இடமில்லையெனில், இந்த தரணியை தகர்த்திடுவோம்! என்று நாம் தினமும் பாடினாலும், இங்கு கேட்பார் ஒருவரில்லை” என்று பெருமூச்சுடன் சொல்லி நிறுத்தியது காக்கை.

காக்கை குழந்தைகள், தங்கள் முன்னோர்களின் கதையை கேட்டு கொஞ்சம் பசியை மறந்தது. தந்தை காகம் சுற்றுமுற்றும் மறுபடி ஒருமுறை பார்த்துவிட்டு, தன் இறக்கைகளை சிலுப்பிக்கொண்டு தன் அலகால் கோதிவிட்டு கொண்டது. அமர்ந்த இடத்தை விட்டு சற்று தள்ளி அமர்ந்த போது அதன் ஒரு காலில் விரல்கள் ஏதுமில்லாததால், சற்று சறுக்கி சமாளித்து மறுபடி குட்டிகளின் அருகே நகர்ந்து அமர்ந்தது. தந்தையின் கால் வித்தியாசத்தை கண்ட குட்டி காகங்கள், “அப்பா! தங்கள் பாதங்கள் மட்டும் ஏன் வித்தியாசமாக இருக்கிறது?” என்று கேட்டது.
“அது ஒரு கதை! நம் கூடு கட்டும் பணிக்காகவும் உணவுக்காகவும் நானும் உங்கள் தாயும் அடிக்கடி மரத்திலிருந்து சாலைகளில் இறங்க வேண்டிருந்தது. அப்பொழுது ஒரு நாள் விரைவாக மோதி விடுவதுபோல் வந்த ஒரு வாகனத்தின் இரைச்சலுக்கு பயந்து சட்டென்று அருகிலிருந்த மரத்தில் பாய்ந்து ஏற முயன்றதில் மரக்கிளை சறுக்கி கிளையில் கால் மாட்டிக்கொள்ள, என் கால் விரல்களை இழந்துவிட்டேன்” என்று காகம் கூற குழந்தைகள் தந்தையை வேதனையுடன் பார்த்தன.

காகம் குழந்தைகளை சமாதான படுத்த மறுபடி தன் அலகால் அவர்களின் தலையை தடவிவிட்டது. “குழந்தைகளே! கவலைபடாதீர்கள், மனிதர்கள் தங்கள் வசதிக்காக ஏற்படுத்திகொண்ட வாகனங்களால் அவர்களுடன் நம் இனத்தவர்களுக்கும் பாதிப்புதான், என்ன செய்வது? அதை அவர்கள் புரிந்து கொள்ள அந்த ஆண்டவன்தான் அருள் புரிய வேண்டும். நம் முன்னோர்கள் வாழ்ந்த இரைச்சலற்ற இன்பமான வாழ்க்கையை, நாம் இனி கனவில்தான் வாழ முடியும்.” என்று குழந்தைகளை அன்புடன் தேற்றிகொண்டிருந்தபோது தாய் பறவை பறந்துவந்து, தான் தேடி கொண்டுவந்த உணவுகளை தன் குழந்தைகளுக்கு ஊட்டி விட்டது. பசியுடனும் தந்தையுடன் உரையாடிய களைப்புடனும் இருந்த காக்கை குட்டிகள் தாயின் அன்பில் திளைத்து பசியாறி சற்று கண்ணயர்ந்தன.

“கா”, “கா” என்று குரல் கேட்டு கற்பனைகலைய கண் விழித்தேன். மரத்தில் குட்டி காக்கைகள் உறங்க, தாய், தந்தை பறவைகள் அருகருகே அமர்ந்து காவல் காத்துகொண்டிருந்தன. சற்று கழித்து “நீ இரு! நான் சென்று இரைதேடி வருகிறேன்” என்பது போல் அதில் ஒரு காகம் “விர்” என்று பறந்து சென்றது.
வானம் லேசாக இருண்டிருந்தது, சூரியன் முற்றிலுமாக மறைந்து கொண்டிருந்தான். அவனை விரட்டுவது போல் மழைமேகங்கள் வேகமாக வானில் வந்து கொண்டிருந்தன.

“உனக்கு பயந்து செல்லவில்லை.. இன்று என் கடமை முடிந்து விட்டது. இனி என் வரவை மனிதர்களும் பறவைகளும் மறுபடி நாளைதான் ஆவலுடன் எதிர்பார்பார்கள்.. அதற்காக செல்கிறேன்!” என்று சற்று அலட்சியமாக சொல்லிவிட்டு சூரியன் மறைந்து சென்றான்.

“வந்துவிட்டேன் பார்த்தாயா?” என்று எக்களிப்புடன் மழைமேகங்கள் முற்றிலுமாக சூழ்ந்துகொண்டது. “மறுபடி சண்டையா! எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டீர்களா?” என்று வானம் உறுமதொடங்கியது. அந்த காக்கை மறுபடி பறந்து வந்து மரமேறி கொண்டது. நானும் அவ்விடத்தை விட்டு எழுந்து வீடு நோக்கி பயணமானேன். சற்று வலுத்த மழை துளிகளுக்கு பயந்து வாகனங்களும் மக்களும் தங்கள் வேகத்தை கூட்டினார்கள்.

தெப்பலாக நனைந்த படி வீடு வந்து உடைமாற்றி என் நளபாகத்தை உண்டபின் படுக்கையில் விழுந்தேன். மாலையில் கண்களில் தென்பட்ட காட்சிகளும், கற்பனையில் நடந்த காக்கைகளின் உரையாடல்களும் சுற்றி சுற்றி வந்தன. எனக்கும் என் மனைவிக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைகள் நடு நடுவே வந்து போயின. “வீட்டின் பின்புறம் இருக்கும் நிலத்தில் நாலு அறையெடுத்து அதையும் ஒரு வீடாக்கி வாடகைக்கு விட்டால் பணத்திற்கு பணமும் ஆச்சு! நாளை நம் குழந்தைகள் வளர்ந்தபின்பு அவர்களுக்கும் பயன்படும்” என்று நச்சரித்த மனைவியின் பேச்சும், ஏற்கனவே கடனாளியாக இருக்கும் என் நிலையும், அதனை அவளுக்கு புரியவைக்கும்போது எழுந்த கோபதாபங்களும், நினைவுக்கு வர மறுபடியும் நிம்மதிபறிபோய்விடுமோ என்ற பயத்தில் உறக்கம் வரவில்லை. பிறர் முதுகின் அழுக்கை விமர்சிக்கும் நாம், நம் முதுகை ஆராயவதில்லை! அதை பற்றி கவலை ஏதும் அடைவதுமில்லை. நிதர்சனத்தின் உறுத்தலில் நீண்டநேரம் நித்திரை வர மறுத்தது. பலவிதமான எண்ணங்களின் இறுதியில் மனதில் ஒரு தெளிவான முடிவு வந்தது.
நாளை காலை மனைவியின் எதிர்ப்பையும் மீறி அந்த காலி நிலத்தில் நாலு மரக்கன்றுகளை வாங்கி நட்டு பராமரித்து வரவேண்டும். காக்கைகளும் பிற பறவைகளும் உண்டு உறங்கி தங்கி வாழவும் அந்த இடத்தை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்ற முடிவால் நிம்மதியுடன் நல்ல உறக்கமும் வந்தது. இரவு உறக்கத்தில் வந்த கனவில், காக்கைகளின் “நன்றி கரையல்கள்” காதில் இனிமையாக ஒலிக்க நல்ல உறக்கம் விடிந்த பிறகும் தொடர்ந்தது.

Advertisements
This entry was posted in கதைகள், Story and tagged , , , , , , , , , , . Bookmark the permalink.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s